அமெரிக்க தேர்தலில்
எதிர்பாராத திருப்பம்
பாரிஸ், ஜூலை 22
அமெரிக்க அதிபர்த் தேர்தலுக்கு நான்கு மாதங்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில், ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். தனது துணை அதிபர் கமலா ஹரிஸை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்.
இந்த முடிவு"தனது கட்சி மற்றும் நாட்டின் நலனுக்கானது" என்று அவர் கூறியிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பதற்காக நாட்டை ஒன்றிணைக்க எதையும் செய்வேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
துணை அதிபர் கமலா ஹரிஸ் பைடனின் முடிவைத் தேசப்பற்று என வர்ணித்திருக்கிறார். டொனால்ட் டிரம்பைத் தோற்கடிக்கவும் ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைக்கவும், நமது தேசத்தை ஒன்றிணைக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்-என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், முன்னாள் அதிபர் கிளின்டன் மற்றும் 2016 இல் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தவரான ஹிலாரி கிளின்டன் உட்பட ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பைடனின் முடிவைச் "சுயநலமற்றது" என்ற கூறி வரவேற்றிருக்கின்றனர்.
அமெரிக்கர்கள் இன்னும் நான்கு மாதங்களில் நவம்பர் 5 ஆம் திகதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இந்த நிலையில் 81 வயதான பைடன் கடந்த மாதம் ட்ரம்புக்கு எதிரான விவாதத்தில் தோல்வியடைந்தார். அதனால் அவர் அழுத்தங்களைச் சந்திக்க நேர்ந்தது.
ஜோ பைடன் சமீப காலமாக முதுமை மற்றும் வாக்குத் தடுமாற்றம் தொடர்புடைய விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். அதனால் போட்டியிலிருந்து விலகுமாறு அவரது ஜனநாயகக் கட்சிக்குள்ளிருந்தே கடும் அழுத்தத்தையும் எதிர்கொண்டார்.
பைடன் போட்டியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் தனது அதிபர் பதவி முடிவடையும் வரை பொறுப்பில் தொடர்ந்தும் நீடிப்பார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது. அதேசமயம் தனது விலகல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
22-07-2024
Comments