பாரிஸில் காலை முதல்
லேசான மழைப்பொழிவு
".. பருவநிலை மாற்றத்தின்
சோதனைக் களமாகப் பாரிஸ் ஒலிம்பிக்.."
பாரிஸ், ஜூலை, 26
கோடை ஒலிம்பிக்கிற்கு வெயில் இல்லை.., குளிர்கால ஒலிம்பிக்கிற்குப்
பனி இல்லை என்ற நிலை.
பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் விடாமல் வானத்தைப் பார்த்தபடி பதற்றத்தில் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றனர். செய்ன் நதி மீது தொடக்க விழா ஆரம்பமாக இன்னும் ஓரிரு மணிநேர அவகாசமே இருக்கிறது. அதற்குள் பாரிஸ் வானில் இருள் சூழ்ந்து மழை தூறத் தொடங்கியுள்ளது. இது லேசான மழையாகவே இருக்கும். பிற்பகலில் தணிந்து வடும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.
ஆனாலும் விழாவின் நடுவே மழை திரும்பிவரக்கூடிய சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று எச்சரிக்கின்றது பிரான்ஸின் வானிலை ஆய்வு மையம் "மெத்தியோ பிரான்ஸ்".
அமெரிக்கா உட்பட வெளிநாட்டு வானிலை மையங்களும் பாரிஸில் இரவு எட்டு மணிவரை மழைபெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறியுள்ளன. ஏற்பாட்டாளர்கள் விழா நிகழ்வுகள் இடம்மாற்றப்படமாட்டாது என்றே இந்த நிமிடம் வரை கூறிவருகின்றனர்.
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா அதன்
வரலாற்றிலேயே முதல் முறையாகத் திறந்த பொது வெளியில் - நீர்நிலை மீது - ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
பாதுகாப்பு வழங்குவதில் மிகச் சவாலானது என்பது தெரிந்தும் பிரான்ஸின் அரசும் குறிப்பாக அதிபர் மக்ரோனும் ஒலிம்பிக் குழுவினரும் சில கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் துணிந்து இந்தத் தீர்மானத்தை எடுத்தனர். நாட்டின் எல்லைக்குள் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மிக ஆபத்தான நிகழ்வு என்று சர்வதேச ஊடகங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. ஆயினும் குண்டுத் தாக்குதல் முதல் சைபர் தாக்குதல் வரை எத்தகைய நாச வேலைகளையும் தடுத்து உடைத்து இந்தப் பெரு விழாவை சிறப்பாக நடத்தி முடித்து வல்லரசு தேசத்தின் பெருமையை நிலைநாட்டிக்காட்டப் பாதுகாப்புப் பிரிவுகள் திடசங்கற்பம் பூண்டுநிற்கின்றன.
ஆனால் இயற்கை...?
சிலர் மனித கற்பனைகளும் பருவநிலையும் ஒரே புள்ளியில் சந்திக்கின்ற நிகழ்வு இது என்கின்றனர்
பிரமாண்டமான ஒலிம்பிக் விழாக்கள் பருவநிலையைப் பாதிக்கின்றன என்று சுழலியலாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேசமயம் மாறிவரும் பருவநிலை ஒலிம்பிக் போட்டிகளுக்கு
அவசியமான தட்ப வெப்பப் புறச்சூழ்நிலைகளைப் பெரிதும்
மாற்றிவருகின்றது. பாரிஸ் ஒலிம்பிக்கும் அதற்குத் தப்பவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாகப் பிரான்ஸில் இந்த ஆண்டு முழுவதும் நீடித்து வருகின்ற கோடை மழை அதி உச்ச கோடைப் பருவமாகிய ஓகஸ்ட் மாதத்திலும் நீடிக்கின்றது. இடிமுழக்கத்துடன் குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்க்கின்ற புயல் மழை பூமி வெப்பமடைவதன் விளைவு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம் அண்மைய வரலாற்றில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நாடுகள் பனிக்கட்டி மைதானங்களைச் செயற்கையாகவே
உருவாக்க நேர்ந்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக்
போட்டிகளை நடத்தும் வாய்ப்பு பிரான்ஸுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டிகள் நடக்கவுள்ள பிரான்ஸின் அல்ப்ஸ் பிராந்தியத்தில் பனிமலைகள் வேகமாக உருகி வருகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
26-07-2024
Comments