top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தேர்தல் அறிவிப்பால் வலதுசாரிகளிடையே பெரும் குத்துவெட்டு! அரசியல் களம் சூடு!!

ரிப்பப்ளிக்கன் கட்சியின்

தலைவர் தூக்கப்பட்டார்!!

அலுவலகத்தை கைவிட

அவர் மறுப்பு, விடாப்பிடி


பாரிஸ், ஜூன் 13


மக்ரோனின் திடீர்த்தேர்தல் அறிவிப்பு பிரான்ஸின் வலதுசாரிகள் மத்தியில் பெரும் பிளவுகளையும் உட்கட்சி மோதல்களையும் ஏற்படுத்தி உள்ளது.

தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென்னின் அணியோடு தேர்தல் கூட்டுச் சேரும் விவகாரத்தால் நாட்டின் பாரம்பரிய பழைமைவாதக்

கட்சியாகிய ரிப்பப்ளிக்கன் அணி இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.


நிக்கலஸ் சார்க்கோசி போன்ற தலைவர்களைக் கொண்டு இயங்கிய பிரதான வலதுசாரி அணியாகிய ரிப்பப்ளிக்கன் கட்சியின் (Les Républicains) தலைவராகிய எரிக் சியோட்டி(Éric Ciotti) நடைபெறவிருக்கும் தேர்தலில் தனது கட்சி மரின் லூ பென் அம்மையாரது கட்சியுடன் கூட்டு வைக்கவுள்ளது

என்று எவரும் எதிர்பாராத பரபரப்பான முடிவைப் புதன்கிழமை அறிவித்தார். அரசியல் மட்டங்களில் அவரது அவரது அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மரின் லூ பென்னுடன் கூட்டா என்று கேட்டு வெகுண்டெழுந்த கட்சியின் ஏனைய தலைவர்கள் நிர்வாகக் குழுவைக் கூட்டி எரிக் சியோட்டியைக் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற்றினர்.


கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்றியது செல்லுபடியாகாது என்றும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாத ஒரு சிறு குழுவினரது வேலை அது எனவும் கூறியிருக்கின்ற எரிக் சியோட்டி, பதவி நீக்கத்துக்கு எதிராகச் சட்ட உதவியை நாடப்போவதாக

அறிவித்துள்ளார். பாரிஸில் உள்ள ரிப்பப்ளிக்கன் கட்சியின் தலைமையகத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தானே இன்னமும் தலைவர் என்று அறிவித்தார். கட்சித் தலைவரது அலுவலகத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டார். நாட்டின் நலனுக்காகத் தொடர்ந்தும் அங்கேயே இருந்து செயற்படப்போவதாகத் தனது சமூக ஊடகத்தில் படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் கட்சிக்குள் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது.


தேர்தலில் பெரும் வெற்றிபெறும் என்று கணிப்பிடப்படுகின்ற மரின் லூ பென்னின் தீவிர வலதுசாரி le Rassemblement national கட்சியுடன்

நாட்டின் வலதுசாரிகள் தேர்தல் கூட்டு வைக்க முன்வந்தமை

வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, தேர்தலை எதிர்கொள்ளும் விடயத்தில் தீவிர வலதுசாரி அணிகளுக்கு இடையிலும் போட்டியும் பிளவுகளும் மோதல்களும் வெடித்துள்ளன.மரின் லூ பென் அணிக்கு எதிரான மற்றொரு சிறிய தீவிரவலதுசாரிக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அரசியல் விமர்சகரும்

முன்னாள் ஊடகவியலாளருமாகிய எரிக் செமூரின் (Eric Zemmour) Reconquête என்ற தீவிர தேசியவாதக் கட்சியிலேயே பிளவு ஏற்பட்டு அதன் முக்கிய பிரமுகராகிய

மரியோன் மரேசால்(Marion Marechal)

வெளியேறியிருக்கிறார். மரின் லூ பென்னுக்கு மருமகள் உறவுமுறைகொண்ட மரியோன், எரிக் செமூரின் கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார்.


இதேவேளை, நாட்டின் இடதுசாரிகள் மத்தியிலும் தேர்தலை எதிர்கொள்ளும் உத்திகள், வியூகங்கள் தொடர்பான பேச்சுக்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அடுத்த பிரதமர் நீயா நானா என்றவாறான தகவல்களும் அரசியல்வாதிகளிடையே வெளியாகிவருகின்றன.


மரின் லூ பென்னின் கட்சியிடமிருந்து பெரும் சவாலைச் சந்தித்திருக்கின்ற மக்ரோன், ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாகிய கையோடு நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடத்துகின்ற அறிவிப்பை விடுத்தமை வாசகர்கள் அறிந்ததே. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2027 இலேயே முடிவடைய இருந்தது. எனினும் அரசுத் தலைவர் திடீரென இடைத் தேர்தலை அறிவித்திருப்பது பிரான்ஸின் அரசியல் களங்களில் பெரும் அதிர்வுகளையும் அணி மாற்றங்களையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.


🔵தொடர்புடைய செய்திகள்


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-06-20





0 comments

Comments


You can support my work

bottom of page