top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தேர்தல் பெறுபேறு எதுவாக இருந்தாலும் அதிபர் மக்ரோன் பதவிவிலகமாட்டார்!

அவரே தெரிவிப்பு

விரிவான தகவல்


பாரிஸ், ஜூன் 14


சில வாரங்களில் நடைபெறவுள்ள இடைக்காலப் பொதுத் தேர்தலின் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதிபர் மக்ரோன் பதவி விலகமாட்டார். அதற்கு எந்த அவசியமும் கிடையாது என்று அவரே தெரிவித்திருக்கிறார். தீவிர வலதுசாரிகளையும் தீவிர இடதுசாரிகளையும் வாக்குகளால் புறந்தள்ளுமாறு அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


அதேசமயம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறு தனிப்பட்ட முறையில் "தன்னைப் பாதித்தது" என்று அவர் நேற்று இத்தாலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.


"நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கான சீரமைப்புகளில் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து வந்த என்னை அது(தேர்தல் முடிவு) பாதித்தது. ஞாயிறன்று என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. "-இவ்வாறு மக்ரோன் கூறியுள்ளார்.


தேர்தலில் தமது அணி அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிப் புதிய அரசை நிறுவப் போவது உறுதி என்று அடித்துக் கூறுகின்ற மரின் லூ பென் அணியினர்,

மக்கள் தீர்ப்பு அவ்வாறு அமைந்தால் அரசுத் தலைவர் மக்ரோன் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.


அதிபர் மக்ரோன் இது தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடுகையில், பதவிவிலகப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.


“அரசமைப்பை எழுதுவது ஆர்என் கட்சி அல்ல (RN என்பது மரின் லூ பென்னின் Rassemblement national கட்சி) , அதன் ஆவியும் அல்ல. அரச கட்டமைப்புகள் மிகத் தெளிவாக உள்ளன, தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், அதிபரின் ஸ்தானம் என்ன என்பது தெளிவாக உள்ளது. இவை ஒன்றும் என்னை நெருங்க முடியாது ”


-இவ்வாறு மக்ரோன் கூறியிருக்கிறார்.


577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் லூ பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சி 88 ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தது. அடுத்த தேர்தலில் மேலும் ஆசனங்களுடன் அது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனக் கணிப்புகள் கூறுகின்றன. தீவிர வலதுசாரிகளது எழுச்சியைத் தடுப்பதற்காக அதிபர் மக்ரோன் மற்றொரு தடவை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அரசமைப்பின் படி அடுத்த ஒருவருட காலப்பகுதிக்கு அவர் காத்திருக்க வேண்டும்.


நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் பதவிக்கு வரக்கூடிய பிரதமர் வேறு ஒரு கட்சியிலிருந்தே தெரிவாகுவதற்குப் பெரிதும் வாய்ப்புள்ளது. அதிபர் மக்ரோனின் அணியைச் சாராத ஒருவரே வெளியே இருந்து பிரதமராக வரச் சந்தர்ப்பம் உள்ளது.


⚫நாட்டின் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சியினராக இருக்கின்ற நிலைமை ஏற்பட்டால் அதனால் அதிபரது அதிகாரங்கள் குறையுமா?

அரசமைப்பு என்ன சொல்கிறது?


பாதுகாப்பு, முப்படைகளின் தளபதி, மற்றும் வெளிநாட்டுக் கொள்கை என்பனவற்றில் அதிபருக்குள்ள அதிகாரங்களில் எந்த மாற்றமும் இருக்காது. சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான விடயங்களில் அவர் தொடர்ந்தும் ஈடுபடமுடியும். ஆனால் உள்நாட்டுக் கொள்கைகளில் அவர் தனித்துத் தீர்மானம் எடுக்கின்ற அதிகாரங்கள் இழப்பார்.


-இவ்வாறு பிரெஞ்சு அரசமைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.


அதிபரும் அவரது பிரதமரும் எதிரும் புதிருமான இரண்டு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்து கொண்டு இணக்கப்பாட்டுடன் ஆட்சி செய்யவேண்டிய நிலைவரம் இதற்கு முன்னர் எப்போது ஏற்பட்டது?


ஆம், 1958 இல் ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து - மூன்று முறை நாட்டின் அதிபரும் அவரது பிரதம மந்திரியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கடைசியாக 1997 இல் அது நடந்தது, அதிபர் ஜாக் சிராக்கின் அரசாங்கம் சோசலிஸ்ட் தலைமையிலான கூட்டணியிடம் திடீர் தேர்தலில் தோல்வியடைந்தது. சோசலிஸ்ட் தலைவர் லியோனல் ஜோஸ்பன் (Lionel Jospin) பிரதமராக அறிவிக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்தி :

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-06-2024


0 comments

Comments


You can support my work

bottom of page