சில இடங்களில் 2/3°C
இந்த வாரம் நீடிக்கும்
பாரிஸ், செப்ரெம்பர் 12
பாரிஸ் உட்படப் பல பிராந்தியங்களில் வசிப்பவர்கள் இன்று வியாழக்கிழமை காலை குளிர் ஆடைகளை அணிந்து வெளியே வரவேண்டி இருக்கும்.
இலையுதிர்காலத்துக்கு முந்திய கடும் குளிர் பருவம் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ளது. பல பகுதிகளில் மழையும் நீடிக்கிறது.
தலைநகர் பாரிஸில் வெப்பம் 9°C வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவ காலத்துக்குரிய வழக்கமான வெப்பநிலை கடந்த திங்கட்கிழமை முதல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அது இன்று வியாழக்கிழமை பல பிராந்தியங்களில் 5 - 8°C வரை குறையலாம். உள்ளூரில் அது மேலும் 2/3°C வரை வீழ்ச்சி அடையும்.
கடும் துருவக் கடற் குளிர் காற்று (air plus frais d’origine polaire maritime) நாடெங்கும் பரந்து வீசுவதே தற்போதைய வெப்பநிலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் என்று அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் தென் கிழக்குப் பகுதிகளில் மாத்திரம் மாலையில் வெப்பநிலை 20°C
அளவைத் தாண்டும். ஏனைய பகுதிகளில் அதற்குக் குறைந்த அளவு வெப்பநிலையே நீடிக்கும்.
-இவ்வாறு பிரான்ஸின் வானிலை அவதான நிலையம் Météo-France அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
சனிக்கிழமை வரை இது நீடிக்கலாம் என்றும் எதிர்வு கறப்பட்டுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
12-09-2024
Comments