top of page
Post: Blog2_Post

துளூசில் பாலம் வீழ்ந்த அனர்த்தம் : தமிழ் குடும்பஸ்தரே உயிரிழப்பு

சிக்குண்ட நால்வரும்

கட்டடத் தொழிலாளர்


பாரிஸ், மார்ச், 05


துளூஸ் நகருக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில் பாலம் தகர்ந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர் பாரிஸ் புறநகரில் வசிக்கின்ற தமிழ்க் குடும்பஸ்தர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


துளூஸ் நகர மெற்றோ ரயில் வழித்தட விஸ்தரிப்புக்காக Labège என்ற இடத்தில் நிறுவப்பட்டு வந்த

கொங்கிறீட் பாலத்தின் தளப் பகுதி திடீரென வீழ்ந்த இந்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் நால்வரும் தங்களது நிறுவனத்தின் பணியாளர்களே என்று Bouygues Travaux publics கட்டட நிர்மாண நிறுவனம் விடுத்த ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். நான்காவது நபருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினருக்கு நிறுவனம் தனது இரங்கலை வெளியிட்டிருக்கிறது.


நேற்றுத் திங்கட்கிழமை மாலை நேர்ந்த

இந்த விபத்தில் Bouygues Travaux publics

கட்டுமான நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவரான 55 வயதுடைய

தம்பிராசா பற்குணராஜா என்ற மூன்று பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தார் என்பதைப் பாரிஸ் தமிழர் வட்டாரங்கள்

உறுதிப்படுத்தின. அவர் பாரிஸின் புற நகராகிய பொண்டியில் வசித்து வந்தவர் என்று கூறப்படுகிறது.


விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விபத்து நேர்ந்த சமயம் பணியாளர்கள் நால்வரும் பாலத்தின் தளப் பகுதி மீது நின்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. பாலம் தகர்ந்த சமயத்தில் அவர்கள் பத்து மீற்றர்கள் உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


ஆரம்ப கட்ட விசாரணைகள் பாரம் தூக்கி ஒன்றின் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பே (breakage of a jack) இந்த அனர்த்தத்துக்குக் காரணம் என்று

கண்டறிந்துள்ளன.


உயிரிழந்தவரது உடல் பரிசோதனை

புதன்கிழமை இடம்பெறும் என்று துளூஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம்

தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியை அரச வழக்கறிஞர் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-03-2024






0 comments

コメント


You can support my work

bottom of page