லூ பென் கட்சி அணிக்கு
அமோக வெற்றி வாய்ப்பு
பாரிஸ், ஜூன் 8
பிரான்ஸில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பில்
ஜோர்டான் பார்டெல்லாவைத் (Jordan Bardella) தலைமை வேட்பாளராகக் கொண்ட தீவிர வலதுசாரி அணியின் வெற்றிவாய்ப்புக்கள் மிகப் பிரகாசமாக உள்ளன என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று ஐரோப்பிய நாடுகள் எங்கும்-குறிப்பாக ஜேர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் - தீவிர வலதுசாரிகளது எழுச்சியும் புதிய அரசியல் கட்சிகளது எழுகையும் இந்தத் தடவை ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கப்போகின்றன என்று
அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை இந்தத் தேர்தல் வாக்களிப்பு
ஒன்றிய நாடுகளில் நடைபெறுகின்றது.
இந்தியாவுக்கு அடுத்த படியாக மிக அதிகமான சனத் தொகையினர் வாக்களிக்கின்ற தேர்தல் இதுவாகும்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 720 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளையும் சேர்ந்த 380 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாடுகளது சனத் தொகைக்கு ஏற்பவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு எண்ணிக்கை பகிரப்படுகிறது. ஜேர்மனிக்கு அடுத்தபடியாக பிரான்ஸில் இருந்தே அதிக உறுப்பினர்களாக 81 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
ஒரு நாட்டில் தேசிய அளவில் 25 சதவீதமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டுக்கான ஆசனங்களில் அதே 25 சத வீதமானவற்றைப் பெற்றுக் கொள்ளும்.
பிரான்ஸில் மக்ரோனின் ஆளும் கட்சி மற்றும் சோசலிஸக் கட்சிகளை முந்திக் கொண்டு மரின் லூ பென் அம்மையாரது கட்சி தேசிய அளவில் 30 சதவீதமான வாக்குகளை வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
மக்ரோனின் ஆளும் கட்சிக்கு இத் தேர்தல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பாக அமையவுள்ளது. அரசியலில் புதிய முகமாகிய வலேரி ஹயர் (Valérie Hayer) என்ற பெண் வேட்பாளர் ஆளும் கட்சி வேட்பாளர் அணிக்குத் தலைமை வகிக்கிறார்.
ஜரோப்பியவாதியாகிய மக்ரோன், ஐரோப்பிய எதிர்ப்புவாதியாகிய தீவிர வலதுசாரி மரின் லூ பென்னின் அணியிடமிருந்து உள்நாட்டில் பலத்த சவாலை எதிர்கொள்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பா பெரும் போரைச் சந்திக்கின்ற விளிம்பில் நிற்கிறது. இந்த நிலையில் ஒன்றியத் தேர்தலில் ஐரோப்பிய எதிர்ப்புவாதிகளது எழுச்சியும் வெற்றியும் ஐரோப்பாவின் எதிர்காலப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வரவுசெலவுத் திட்டங்களில் குழப்பங்களை உருவாக்கலாம்.
தேர்தல் முடிவுகள் நாளை ஞாயிறு பிற்பகல் முதல் வெளியாகத் தொடங்கும்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
08-06-2024
Comments