உயிராபத்தான
நிலையில் மீட்பு
பாரிஸ், ஜூன், 23
பாரிஸ் பிராந்தியத்தின் பிரபல துவாறி உயிரியல் பூங்காவில்(Parc zoologique de Thoiry) 36 வயதுப் பெண் ஒருவரை ஓநாய்கள் தாக்கிக் கடித்துக் குதறிப் படுகாயப்படுத்தியுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகலில் பூங்காவில் கூடியிருந்தவர்கள் எதிர்பாராத இந்தச் சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சியடைய நேரிட்டது.
அந்தப் பெண் நடைப் பயிற்சியில் ஈடுபடுபவர் எனக் கூறப்படுகிறது. பூங்காவில் கால்நடையாகச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்ட - வாகனங்கள் மாத்திரம் பிரவேசிக்கின்ற - வலயத்தினுள் அவர் எவ்வாறு சென்றார் என்பது தெரியவரவில்லை. பூங்காவில் வசிக்கின்ற நான்கு ஓநாய்கள் அந்தப் பெண்ணைக் கடித்துக் குதறிக் காயப்படுத்தியுள்ளன. பூங்கா காவலர்கள் உடனடியாகத் தலையிட்டதால் அவர் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றார்.
துவாறி பூங்காவில் இரவு நேரத்தில் தங்கியிருந்து விலங்குகளைப் பார்க்கின்ற வசதிகளும் உள்ளன. அந்தப் பெண் அவ்வாறு அங்கு கூடாரத்தில் தங்கியிருந்தார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
பாரிஸ் பிராந்தியத்தின் இவ்லின் (Yvelines-78) மாவட்டத்தில் பரந்த பெரும் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த விலங்கியல் பூங்கா பார்வையாளர்கள் தங்கள், தங்கள் வாகனங்களில் பயணித்தவாறே காட்டு விலங்குகளைத் தரிசிக்கின்ற சஃபாரி வலயங்களையும் உள்ளடக்கியது.
பார்வையாளராகிய பெண் விலங்குகளிடம் சிக்க நேர்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
23-06-2024
Komentarze