top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தமிழ் இளைஞனின் சடலம் சூரிச்சில் மீட்பு இருவர் கைது!

கொலை விசாரணை


பாரிஸ், செப்ரெம்பர் 19


சுவிற்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக இரண்டுபேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.


34வயதுடைய அந்த ஆணின் சடலம் சூரிச் கன்ரன் பொலீஸ் பகுதியில் உள்ள Glattbrugg என்ற

இடத்தில் தொடர்மாடி ஒன்றில் புதன்கிழமை காலை மீட்கப்பட்டதாக

சூரிச் பொலீஸார் அறிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதாகிய இருவரும் 40 மற்றும் 54 வயதுடைய சுவிஸ் பிரஜைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் உயிரிழந்த இளைஞனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.


உயிரிழந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த கோபி என்று அழைக்கப்படும் கோபிநாத் என்று சூரிச் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த இளைஞரது பேஸ் புக் படங்களை அவரது நண்பர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


அவசர மருத்துவ உதவி கேட்டு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து மீட்புப் பணியாளர்கள் Riedthofstrasse

என்ற வாடகைத் தங்குமிட கட்டடத்துக்கு

விரைந்து சென்ற போது அங்கே இளைஞனின் உடலைக் கண்டுள்ளனர்.

எவ்வாறான சூழ்நிலையில் அவர் உயிரிழந்தார் என்பது தொடர்பில் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


சூரிச் கன்ரன் பொலீஸாரும் சூரிச் அரச வழக்கறிஞர் அலுவலகமும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொலைக் குற்றம் நடந்ததாக நம்பப்படும் இடத்தை தடயவியலாளர்கள் ஆய்வுசெய்துவருகின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

19-09-2024







0 comments

Comments


You can support my work

bottom of page