🟡நாடாளுமன்றம் முதல்.....
பெரிய பள்ளிவாசல் வரை
உணர்வுபூர்வ அஞ்சலோட்டம்
பாரிஸ், ஜூலை 14
அரசியல் நிலைவரங்களால் சோபை இழந்த சுதந்திர நாள் நிகழ்வினை ஒலிம்பிக் தீப்பந்தத்தின் வருகை புத்துயிர் பெறவைத்திருக்கிறது.
ஒலிம்பிக் விழா கோலாகலமாக ஆரம்பமாவதற்கு இன்னமும் 12 தினங்கள் இருக்கின்ற நிலையில், ஒலிம்பிக் தீப்பந்தம் இன்றைய தினம் முதல் முறையாகப் பாரிஸ் நகரை வந்தடைந்தது. பாரிஸ் நகரின் மையத்தில் வெற்றி வளைவு அருகே புதிய இடத்தில்-அவென்யூ ஃபொஷ்
வீதியில்-இன்று பகல் இடம்பெற்ற கண்கவர் சுதந்திர நாள் ராணுவ அணிவகுப்புகளில் ஒலிம்பிக் தீப்பந்தம் இணைந்து கொண்டது.
குதிரைப்படைப் பயிற்சிக்கல்லூரி வீரர் ஒருவரால்(cavalier militaire) குதிரை மீது சுமந்து வரப்பட்ட தீப்பந்தம் அதிபர் மக்ரோன் உட்படப் பிரதம அதிதிகள் கூடியிருந்த மேடையின் முன்பாக வைத்து தேசிய கீதம் ஒலிக்க, ஒலிம்பிக் சம்பியன்கள் அடங்கிய இளம் விளையாட்டு வீரர்கள் அணியிடம் கையளிக்கப்பட்டது. இம்முறை அணிவகுப்பில் விசேட சிறப்பு அம்சமாக ஒலிம்பிக் தீப்பந்தத்தின் உணர்வுபூர்வ வருகை வரலாற்றில் பதிவாகியது.
அணிவகுப்பு முடிவடைந்ததும் தீப் பந்தத்தின் அஞ்சல் ஓட்டம் உலகின் அழகிய தெரு என வர்ணிக்கப்படுகின்ற அவென்யூ சாம்ஸ் எலிஸீயில்(Champs-Elysees avenue) இருந்து பாரிஸ் வீதிகளை நோக்கித் தொடங்கியது. ஒலிம்பிக் உதைபந்தாட்டப் பயிற்றுநர் தியறி ஹென்றி (Thierry Henry) அங்கிருந்து தீப் பந்தத்தை சுமந்து ஓட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
படம் :ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர்
ரொனி எஸ்தான்கே(Tony Estanguet) மற்றும் பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ ஆகியோருடன் தியறி ஹென்றி..
பாரிஸ் நகரின் மையத்தில்
அமைந்துள்ள புகழ் பெற்ற நொத்த - டாம்(Notre-Dame) மாதா கோவில் முன்பாகத் தீப்பந்தத்தை வரவேற்கின்ற கொண்டாட்டத்தைப் பாரிஸ் தீயணைப்பு சேவையினர் செய்திருந்தனர். 2019 ஆம் ஆண்டு தேவாலயம் திடீரெனத் தீப்பிடித்து அதன் கூரைப் பகுதி முழுவதையும் தீ விழுங்கியமை தெரிந்ததே. அந்த சமயத்தில் தீயை அணைக்கப் போராடிய வீரர்கள் அனைவரும் இன்றைய நிகழ்வில் தேவாலயம் முன்பாக அணிவகுத்து நின்றிருந்தனர்.
தீயணைப்புப் படையின் கீதம் இசைக்க தீப்பந்தத்தை படைப் பிரிவின் தலைவர்களில் ஒருவர் சுமந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவரும் சக்கர நாற்காலியில் வந்து தீபத்தைப் பெற்றுக் கொண்டார்.
நீண்ட காலத் திருத்த வேலைகளின் பின்னர் நொத்த-டாம் தேவாலயம் புதுமெருகு பெற்றுள்ளது தெரிந்ததே.
இந்த ஆண்டு இறுதியில் அது மீண்டும் வழிபாட்டுக்காகத் திறக்கப்படவுள்ளது.
பாரிஸில் 2015 நவம்பர் 13 ஆம் திகதி
நடந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களின் மையமாகிய பற்றகிளான் இன்னிசை அரங்குக்கு (Bataclan concert Hall) முன்பாகவும் தீப்பந்தம் ஏந்தும் வைபவம் நடந்தது.
தாக்குதல்களில் உயிரிழந்த 130 க்கும் மேற்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவர் அங்கு தீபத்தை ஏந்திச் சென்றார்.
படம் :சுதந்திர தினத்தின் அடையாளத்தைக் குறிக்கின்ற place de la Bastille பகுதியில் ஒலிம்பிக் தீபத்தை நட்சத்திர நடனக் கலைஞர்கள் Hugo Marchand மற்றும் Dorothée Gilbert ஆகிய இருவரும் கூட்டாகச் சுமந்து நின்ற காட்சி...
படம் :நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த நிகழ்வில்...
பாரிஸ் பெரிய பள்ளிவாசல், அரபு கலாசார நிலையம், பந்தியோன் அரண்மனை, ஒபேரா இசை அரங்கம்,
லூவர் அருங்காட்சியகம் உட்படப் பல முக்கிய மையங்களைக் கடந்து சென்ற ஒலிம்பிக் தீபம் இன்றிரவு பாரிஸ் நகரசபைக் கட்டடத்தில் ஓய்வு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தலைநகரில் தீப்பந்தப் பவனி இன்றும் நாளையுமாக இரண்டு தினங்கள் இடம்பெறவிருப்பது தெரிந்ததே.
தீப் பந்தம் நாளை திங்கட்கிழமை பாரிஸ் Gambetta பகுதியைக் கடக்கின்ற சமயத்தில் பாரிஸ் வெதுப்பகத் துறையில் சாதனை படைத்த ஈழத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவும் அஞ்சல் ஓட்டத்தில் இணையவுள்ளார். பாரிஸ் வாழ் தமிழர்கள் அங்கு அணிதிரண்டு அந்தக் காட்சியைக் கண்டுகளிக்கவுள்ளனர்.
🟡முன்னர் வந்த செய்தி
தாஸ்நியூஸ் - பாரிஸ்
14-07-2024
Comments