top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தவளைக் கால் இறக்குமதியைக் குறைக்குமாறு உலக அறிவியலாளர் குழு மக்ரோனிடம் மனு!

உயிரின் பல்வகைமைக்கு

பேராபத்து என எச்சரிக்கை


பாரிஸ், மார்ச் 30


உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் மற்றும் விலங்கு மருத்துவ நிபுணர்கள் 560 பேர் இணைந்து அதிபர் மக்ரோனுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் தவளைக் கால் இறக்குமதி வர்த்தகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துமாறு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


உணவுக்காகத் தவளை இனங்கள் கொல்லப்படுகின்ற வேகம் உயிரின் பல்வகைமை(biodiversity) மீது ஏற்படுத்திவருகின்ற மிகப்பெரிய சேதத்தையும் நுளம்புப் பெருக்கம் மற்றும் பல கொடிய நோய்களையும் கட்டுப்படுத்துவற்காகவே இவ்வாறு வேண்டுகோளை முன்வைப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக அதிகளவாகத் தவளைக் கால்களை உணவுத் தட்டுகளில் நுகருகின்ற நாடாகப் பிரான்ஸ் விளங்குகின்றது.

படம் :உள்ளி, எலுமிச்சை அல்லது பாண் துகள்களுடன் சேர்த்துப் பொரித்து எடுக்கப்படுகின்ற பிரான்ஸின் பிரபல தவளைக் கால் உணவுத்தட்டு...

 

உறைகுளிரில் பேணப்படும் தவளைக் கால்கள் வருடாந்தம் 4ஆயிரத்து 70 தொன் என்ற அளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதியாகின்றன. அவற்றில் சுமார் மூவாயிரம் தொன் கால்கள் பிரான்ஸின் உணவுத் தேவைகளுக்காக மட்டும் பெறப்படுகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எண்பது வீதமான தவளைகள் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. துருக்கி, வியட்நாம், அல்பேனியா போன்ற நாடுகளில் இருந்தும் தவளைக்கால்கள்

வருகின்றன.


தவளைக் கால் உலகின் பல நாடுகளில் பாரம்பரிய உணவாக இருந்துவருகின்ற

போதிலும் பிரான்ஸின் சமையல் முறைகளில் அதற்குத் தனியான இடம் உள்ளது. சமீப காலங்களில் உலகெங்கும் தவளைக் கால் இறைச்சி நுகர்வு வேகம் அதிகரித்து வருவதால் அதன் சட்டவிரோத வர்த்தகமும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆண்டு தோறும் சுமார் நூறு மில்லியன் தவளைகள் உணவுக்காகக் கொல்லப்படுகின்ற என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் கட்டமைப்பைப் (ecosystems) பேணுவதிலும் பயிர்ச் செய்கையிலும் தவளை உயிரினங்கள் சிறப்பான பங்கு வகிக்கின்றன. நீரேரிகளில் தண்ணீரின் தரத்தைப் பேணுகின்றன. வயல்கள் மற்றும் விளை நிலங்களில் பூச்சிகளை அழித்து விவசாயிகளுக்குத் துணைபுரிகின்றன. அதன்மூலம் பூச்சி நாசனிகளின் குறைந்தளவு பயன்பாட்டுக்கும் அவை காரணமாகின்றன. நுளம்பு மற்றும் நோய்களைப் பெருக்குகின்ற கொசு இனங்களைத் தவளைகள் உண்பதால்

டெங்கு போன்ற நுளம்பால் பரவும் கொடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பல வழிகளில் சூழலுடன் இணைந்து வாழும் தவளை இனங்கள் அழிந்து அருகி வருகின்றன.


கோரைத் தவளை (fanged river frog- Limnonectes macrodon)எனப்படும்

இனங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டன.

மேலும் இரண்டு பொதுவான இனங்களாகிய நண்டு உண்ணும் தவளை (crab-eating frog) நெல்வயல் தவளை (rice-field frog) ஆகியன கடந்த பல ஆண்டுகளாக வணிக நோக்கில் வேட்டையாடப்படுவதால் வேகமாக அழிவடைந்து வருகின்றன என்று சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் மக்ரோனுக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளனர்.


தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட "அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான உடன்பாட்டின் (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) கீழ் பாதிக்கப்படக்கூடிய தவளை இனங்களுக்கு உலகளாவிய பாதுகாப்பைப் பெற பிரான்ஸ் வற்புறுத்த வேண்டும் என்று அறிவியலாளர்கள் வாதிடுகின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-03-2024





0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

You can support my work

bottom of page