"லெபனான் மற்றொரு
காஸாவாகக் கூடாது!.."
இஸ்ரேலுக்கான ஆயுத
உதவியை நிறுத்துமாறு
கோருகின்றார் மக்ரோன்
பாரிஸ், ஒக்ரோபர் 5
மத்திய கிழக்கு நெருக்கடியில் இன்று முன்னுரிமையளிக்கப்படவேண்டியது ஒர் அரசியல் தீர்வுக்குதான். எனவே காஸாவில் இஸ்ரேல் நடத்திவருகின்ற போருக்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்துங்கள். ஒருபுறம் போர் நிறுத்தத்தைக் கோரியவாறு மறுபக்கம் ஆயுதங்களை விநியோகிப்பது ஒத்திசைவானது அல்ல.
-அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆயுத உதவிகளை நிறுத்துமாறு நேட்டோ நாடுகளைக் கோருகின்ற விதமான இந்த அறிவிப்பை இஸ்ரேல் உடனடியாகவே கண்டனம் செய்துள்ளது. மக்ரோனின் இந்த அறிவிப்பு"அவருக்கே அவமானம்" என்று பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு திருப்பிச் சாடியுள்ளார்.
பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளது 19 ஆவது மாநாடு (19th Francophonie summit) பிரான்ஸின் கடந்த வெள்ளியன்று ஆரம்பமாகியுள்ளது. அதிபர் மக்ரோன் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய கிழக்குப் போர் நிலைவரம் குறித்துப் பேசியிருக்கிறார்.
இஸ்ரேல் தன்னையும் தனது மக்கள் தொகையையும் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் சர்வதேச சட்டங்களுக்கும் மனிதாபிமானச் சட்டங்களுக்கும் மதிப்பளித்தே அதனைச் செய்யவேண்டியது கட்டாயமாகும்.
நாங்கள் பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரான போரை ஒரு சிவிலியன் மக்கள் தொகையைப் பலிகொடுத்து நடத்தவில்லை என்று நம்புகிறேன்.
லெபனான் மக்கள் பலிகொள்ளப்படும் மக்கள் தொகையாக மாற்றப்பட்டு விடக் கூடாது. லெபனான் மற்றொரு காஸாவாக மாறிவிடவும் அனுமதிக்க முடியாது.
-இவ்வாறு அந்த நேர்காணலில் மக்ரோன் கருத்துக் கூறியுள்ளார்.
மக்ரோனின் இந்த வேண்டுகோள் தற்போதைய நிலைமையில் எடுபடுமா என்ற ஜயத்தை அவதானிகள் எழுப்புகின்றனர். சிவிலியன்களைக் வெளிப்படையாகக் கொன்று குவிக்கின்ற இஸ்ரேலின் யுத்தத்துக்கு உதவ வேண்டாம் என்று சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளை வல்லரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகளை
நிறுத்துவதற்கு அதிபர் ஜோ பைடன் மறுத்துவிட்டார். சில வகை வெடி குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் கடந்த மேயில் அவர் நிறுத்தினார். இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை
நிறுத்துவதாக இல்லை.
காஸா யுத்தத்துக்கு ஆயுத உதவி எதனையும் பிரான்ஸ் வழங்கவில்லை என்று மக்ரோன் உறுதியளித்துள்ளார். ஆயினும் எலிஸே மாளிகையின் தகவலின்படி வான் பாதுகாப்பு சாதனங்கள் உட்பட இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுத தளபாட ஏற்றுமதிகளை பிரான்ஸின் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் எல்லை தாண்டி நுழைந்து நடத்திய பெரும் தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்ட தம் பபல நூறுபேர் சிறைப் பிடிக்கப்பட்டதும் தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக பாலஸ்தீனப் பகுதிகள் மீது குறிப்பாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா நகரம் மீது இஸ்ரேல் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த ஓராண்டாக நீடிக்கின்ற அந்தப் போர் இப்போது லெபனான் நாட்டை ஆக்கிரமிக்கின்ற பிராந்திய யுத்தமாக விரிவடைந்துள்ளது.
பாலஸ்தீனியர்களின் இராணுவப் பிரிவாகிய ஹமாஸ் மற்றும் லெபனானில் அதிகாரம் செலுத்துகின்ற ஹிஸ்புல்லா இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் ஆகிய இரண்டு பெரிய அமைப்புகளும் ஈரானின் முழு ஆதரவில் இயங்கி வருகின்றன. அதனால் இந்தப் போரில் ஈரானின் தலையீடுகள் தொடர்பான அச்சம் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் காஸா மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் தீவிர குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேசமயம் ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலைக்குப் பதிலடியாகக் கடந்த வாரம் ஈரான் நடத்திய மழை போன்ற ஏவுகணைத் தாக்குதலுக்குத் தனது பதில் நடவடிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் ஒக்ரோபர் 7 ஆம் திகதித் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி இஸ்ரேலில் விழிப்பு நிலை பேணப்பட்டு வருகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
06-10-2024
Comments