போட்டிகளை பாதிக்காது
என்கிறது ஒலிம்பிக் குழு
பாரிஸ், ஜூன் 10
நாடு ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்ற சமயத்தில்-அதன் ஆரவாரங்களுக்கு மத்தியில் - அதிபர் மக்ரோன் ஆச்சரியமளிக்கும் விதமாகத் திடீர்ப் பொதுத் தேர்தலை அறிவித்திருப்பது
பல்வேறு மட்டங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் பெற்ற வெற்றியை அடுத்து மக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத் தேர்தலை அறிவித்திருப்பது தெரிந்ததே. அவரது இந்தத் தீர்மானம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மக்ரோனின் அறிவிப்பை "அதிர்ச்சி" மற்றும் "ஆபத்தான சூதாட்டம்" போன்ற வார்த்தைகளில் குறிப்பிட்டுப் பத்திரிகைகள் தலைப்புகளை வரைந்துள்ளன.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான இரு சுற்று வாக்களிப்பு ஜூன் 30 ஜூலை 7 ஆகிய தினங்களில்
நடைபெறவுள்ளது. இரண்டாவது சுற்று வாக்களிப்புக்குப் பின்னர் மிகக் குறுகிய நாள் இடைவெளியில்-மூன்று வாரங்களில் - ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
தேர்தல் திகதியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிக நெருக்கமாக அறிவித்திருப்பதற்குப் பாரிஸ் நகரின் சோசலிஸக் கட்சி மேயர் ஆன் கிடல்கோ தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.
இது ஒரு குழப்பமான தீர்மானம் என்று அவர் அதிபர் மக்ரோனின் முடிவைச் சாடியிருக்கிறார்.
வேட்பாளர்களைத் தெரிவுசெய்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்குக் கட்சிகளுக்குக் குறுகிய அவகாசமே உள்ளது. அதனால் கட்சிகள் மத்தியிலும் குழப்பம் தோன்றியுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடையே வேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்கக்கவேண்டும்.
பரப்புரை 16 ஆம் திகதி தொடங்கும்.
அதேசமயம் வாக்களிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குக் காலம் போதாது என்று நாட்டின் நகரசபைகளது முதல்வர்கள் தரப்பிலும்
விசனம் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அரசமைப்பு விதிகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கட்சிகள் மத்தியில் சில ஐயங்கள் நிலவுகின்றது. இது தொடர்பில் அரசியல்வாதிகள் நாட்டின் அரசமைப்புச் சபையின் தலையீட்டைக் கோருவதற்கும் வாய்ப்புள்ளது.
இதேவேளை -
பிரான்ஸில் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது ஒலிம்பிக் போட்டிகளைப் பாதிக்காது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee) தெரிவித்திருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ஒரு நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளை ஒருபோதும் குழப்பாது என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பச் (Thomas Bach) கூறியுள்ளார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
10-06-2024
Comments