top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நாடு கடத்தத் தவறிய வெளிநாட்டு இளைஞனாலேயே பாரிஸ் மாணவி கொல்லப்பட்டார்!

மக்கள் மத்தியில்

ஆத்திர உணர்வு

ஜெனீவா ரயில் நிலையத்தில்

அந்த நபர் கைதாகியது எப்படி?

பாரிஸ், செப்ரெம்பர், 26


பாரிஸ் Dauphine பல்கலைக்கழக பொருளியல் பீட மாணவி பிலிப்பீன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 22 வயது வாலிபர் ஏற்கனவே பாலியல் வல்லுறவுக் குற்றம் ஒன்றிற்காகச் சிறை சென்றவர்

என்பதும், பிரான்ஸின் எல்லையை விட்டு நாடுகடத்தப்படவேண்டும் என்ற

உத்தரவின் கீழ் இருந்தவர் என்பதும்

இப்போது தெரியவந்திருக்கிறது.


மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன், சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற வழியில் ஜெனீவா ரயில் நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.


19 வயதான மாணவி பிலிப்பீன் தனது பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளியன்று நண்பகல் நண்பிகளுடன் மதிய உணவை அருந்திய பின்னர் காணாமற்போயிருந்தாள். அதன்பிறகு அவளைத் தேடும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன. மறுநாள் சனிக்கிழமை அவளது சடலம் பல்கலைக்கழகத்துக்கு அருகே அமைந்துள்ள புவா து புளோன் (bois de Boulogne) காட்டுப் பகுதியில் அரையும் குறையுமாகப் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அவளிடம் இருந்த பொருள்கள் களவாடப்பட்டிருந்தன. உடலில் காயங்கள் காணப்பட்டன. மூச்சுத் திணறலால் மரணம் சம்பவித்திருக்கலாம் என்பதைப் பிரேத பரிசோதனை உறுதிப்படுத்தியிருந்தது.


இளைஞன் கைதானது எப்படி?


தொலைபேசி, கண்காணிப்புக் கமெராக்கள் மற்றும் "நவிக்கோ" பயண அட்டை என்பவற்றின் மூலமான தகவல்களின் அடிப்படையிலேயே மாணவியின் கொலைச் சந்தேக நபரான மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஜெனீவாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாணவி காணாமற்போன தினமான வெள்ளியன்று மாலை மாணவியின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி Montreuil-sous-Bois-(Seine-Saint-Denis)

என்ற இடத்தில் உள்ள வங்கிப் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் அவர் பணத்தைச் சூறையாடியிருப்பது கமெராக்களில் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாக வைத்தே அவரைப் பின் தொடரும் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிஸ் பிராந்தியப் பொதுப் போக்குவரத்துத் துறை சந்தேக நபரது நவிக்கோ அட்டைப் பயன்பாடு தொடர்பான பயணத் தகவல்களைக் காவல்துறைக்கு வழங்கியது என்றும் கூறப்படுகிறது. அதன் மூலமே அவர் ரயிலில் சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் செல்வது தெரியவந்துள்ளது.


சுவிஸ் பொலீஸாருக்கு உடனடியாகத் தகவல் பறந்தது. ஜெனீவா ரயில் நிலையத்தில் காத்திருந்த பொலீஸார் அவரை அங்கு வைத்து மடக்கிக் கைதுசெய்தனர்.


மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த தாஹா ஒ (Taha O) என்று குறிப்பிடப்படுகின்ற இந்தச் சந்தேக நபர் 2019 இல் தனது 17 ஆவது வயதில் ஸ்பெயினில் இருந்து குறுகிய பயண வீஸாவுடன் சட்டரீதியாகப் பிரான்ஸுக்கு வந்துள்ளார். இங்கு வந்த சிறிது காலத்திலேயே 23 வயதான மாணவி ஒருத்தியைப் பாரிஸ் புறநகராகிய Taverny (Val-d'Oise) என்ற இடத்தில் காட்டுப் புறம் ஒன்றில் வைத்துப் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.

அதற்காகக் கைதுசெய்யப்பட்ட அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடுப்பு நடைமுறை விதிகளின்படி படி அவர் சுமார் ஐந்து ஆண்டுகள் மாத்திரமே சிறைவாசம் அனுபவித்துள்ளார்.


வீஸா முடிவடைந்த நிலையில் நாட்டினுள் தங்கிக் குற்றச் செயல் புரிந்த அவரைப் பிரான்ஸின் எல்லையை விட்டு நாடுகடத்தும்

உத்தரவு(OQTF) கடந்த ஜூன் மாதம் விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக அவர் சிறைவாசம் முடித்து வெளியேறி விட்டார். அதன் பிறகு அவரை நாடுகடத்தும் உத்தரவு சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவ்வாறு நாடுகடத்தப்படாமல் தப்பியிருந்த நிலையிலேயே மற்றொரு கொடூர கொலைக் குற்றத்தையும் புரிந்துள்ளார்.


கட்டுப்பாடற்ற விதமான வெளிநாட்டவர்களது வருகை மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதனால் உள்ளூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற

உணர்வு போன்ற விவகாரங்கள் பிரான்ஸின் அரசியலில் சூடுபிடித்து எரிந்து கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ் நிலையில், மாணவி ஒருத்தியின் வாழ்வு வெளிநாட்டு இளைஞர் ஒருவரால் சூறையாடப்பட்ட இந்தச் சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்திருக்கிறது.


சில தினங்களுக்கு முன்பு பதவியேற்ற வலதுசார்பு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுகின்ற தீவிர பழமைவாதியாகிய உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ, மாணவியின் படுகொலை தொடர்பாக கருத்துவெளியிடுகையில் -


குடிவரவு தொடர்பான விதிகள் விரைவில் மாற்றியமைக்கப்படும். அவற்றை மாற்றுவது ஒன்றுதான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்ற நிலைமையை மாற்றும் - என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.


 

திருத்தம்


மாணவி பிலிப்பீனின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாகத் தாஸ்நியூஸ் செய்திச் சேவையில் 24-09 - 2024 அன்று முதலில் வெளியிடப்பட்ட செய்தியில் -


புவா து புளோன் காட்டுப் பகுதியில் மாணவியின் சடலம் பாதி எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டது என்ற தகவல் தவறானது ஆகும். பாதி புதையுண்ட நிலையிலேயே சடலம் காணப்பட்டது என்பதே சரியானதாகும். தவறுக்கு வருந்துகின்றோம்.


-செய்தி ஆசிரியர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்



0 comments

Comments


You can support my work

bottom of page