top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நாடாளுமன்றத்தைக் கலைத்தார் மக்ரோன்! ஜூன் 30, ஜூலை 7 புதிய தேர்தல்!!

Updated: Jun 10, 2024

தோல்வியை அடுத்து

அவரது விசேட உரை


பாரிஸ், ஜூலை, ஜூன் 9


ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில்

கிடைத்த பெரும் தோல்வியை அடுத்து அதிபர் மக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலை அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூன்

30 ஆம் திகதியும் ஜூலை 7ஆம் திகதியும் தேர்தல் வாக்களிப்புத் திகதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்ஸின் தீவிர வலதுசாரிகள் அமோக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அவர்கள் பெற்ற வாக்குகளில் அரைவாசியை மட்டுமே வெல்ல முடிந்த நிலையில் தோல்வியடைந்துள்ளது மக்ரோனின் அணி.


இன்று முன்னிரவு தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அதிபர் மக்ரோன் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டுக்கு விசேட உரையாற்றினார். மக்களது தீர்ப்பை ஏற்றுக் கொண்ட அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கின்ற உத்தரவை விடுத்தார். புதிய தேர்தல் திகதிகளையும் அறிவித்தார்.


எலிஸே மாளிகையில் இருந்து வழங்கிய உரையில், தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய ஐக்கியத்தை விரும்பும் கட்சிகளுக்கு ஏமாற்றமளித்துள்ளது என்றார்."எங்கள் நாடாளுமன்றத்தின் எதிர்காலத்தை வாக்கெடுப்பின் மூலம் மீண்டும் தீர்மானிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பை வழங்க நான் முடிவு செய்துள்ளேன். எனவே நான் தேசிய சட்டமன்றத்தைக் கலைக்கிறேன். ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் இரண்டு சுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும் - என்றார்.


அரசமைப்பின் 12 ஆவது சரத்தைக் கவனத்தில் எடுத்து ஆலோசித்த பின்னர் இந்தத் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் மக்ரோன் தெரிவித்தார்.


மரின் லூ பென் அம்மையாரது Rassemblement national எனப்படும் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுள்ள அமோக வெற்றியானது சமீப காலமாக

ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள தீவிர வலதுசாரி அரசியல் அலையின் மற்றொரு பெரும் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி நடத்திவந்த மக்ரோனின் அரசைக் கலைக்குமாறு மரின் லூ பென்னின் கட்சி நீண்ட நாட்களாகக் கோரி வருகிறது. இன்றைய தேர்தல் வாக்களிப்பில் அந்தக் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதும் அதிபர் மக்ரோன் தனது ஆளும் கட்சியின் தோல்வியை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலை அறிவித்திருப்பதும் பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளுக்குக் கிடைத்துள்ள "இரட்டிப்பு வெற்றி" என்று அரசியல் அவதானிகள் வர்ணிக்கின்றனர்.


நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வரவேற்றுள்ள மரின் லூ பென் அம்மையார், வரவிருக்கும் தேசியத் தேர்தலில் பிரெஞ்சு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றத் தயாராக இருக்கிறோம் ”-என்று தெரிவித்துள்ளார்.


மேலதிக விவரங்கள் விரைவில்..


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

09-06-2024

0 comments

Comments


You can support my work

bottom of page