top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நொத்த-டாம் மேலே மிகப்பெரிய'இதயம்' விமானங்கள் வரையும்! ஈபிள் ரவர் லேசர்களால் ஒளிரும்!

Updated: Jul 26

🟡🔴தொடக்க விழாவின்

🔵🟢ஏற்பாடுகள் கசிந்தன.!


பாரிஸ், ஜூலை 25


உலகம் ஆவலுடன் காத்திருக்கின்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்டமான தொடக்க விழா எவ்வாறு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு

உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.


"ஒளிரும் நகரம்"எனப் பெயர்பெற்ற பாரிஸ் நகரம் ஈடிணையற்ற இந்த விழாவின் போது விசேடமாக எப்படி ஒளிரப்போகின்றது...?


பரம ரகசியமாகப் பேணப்பட்டு வந்த ஏற்பாடுகளில் ஒன்றிரண்டு பற்றிய தகவல்கள் செய்தியாளர்களுக்குக் கசிந்துள்ளன.


நதி அணிவகுப்பு ஒரு புறம் நடந்துகொண்டிருக்க மறு பக்கத்தில்

பாரிஸ் வானம் அதிசயமான ஒளிக் கதிர்களால் மிளிரவுள்ளது.


ஒப்பற்ற இந்த வரலாற்று நிகழ்வின் போது இரும்புச் சீமாட்டியான ஈபிள் கோபுரம் இதுவரை பார்த்திராத ஒளிக் கோலம் பூண்டு காட்சி தரவுள்ளது. கோபுரம் முழுவதும் லேசர் ஒளி பாய்ச்சி அலங்கரிக்கப்படவுள்ளது. சக்தி மிக்க லேசர் கருவிகள் கோபுரத்துக்குப் பக்கத்தில் காணப்படுகின்றன.


அதேசமயம் பாரிஸ் வான் பரப்பு ஆறு மணித்தியாலங்கள் மூடப்பட்டு சாகசங்கள் இடம்பெறவுள்ளன. சாகசங்களை நிகழ்த்தும் விமானங்கள் (La patrouille de France) வானத்தில் பிரமாண்டமான இதயம் ஒன்றை வண்ணக் கலவைகளால் வரையவுள்ளன. பாரிஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிய நொத்த-டாம் தேவாலயத்துக்கு(cathédrale Notre-Dame) மேலே வானத்தில் இந்த இதயம் வரையப்படும் எனத் தெரிகிறது.


இவற்றைவிட அதிசயிக்க வைக்கின்ற மேலும் பல நிகழ்வுகள் தரையிலும் வாகனத்திலும் நடைபெறவுள்ளன என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொடக்க விழாவுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து சுமார் மூவாயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இரவு 19.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடக்க விழா மூன்று மணி நேரங்கள் தாண்டி நீடிக்கும். நாடுகள் ஒவ்வொன்றினதும் ஒலிம்பிக் அணிகள் அவற்றோடு பாரிஸ், மற்றும் பிரான்ஸின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற குழுக்கள் செய்ன் நதி மீது மிதவைப் படகுகளில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்கின்ற கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பதற்காக முழு உலகமும் காத்திருக்கிறது. நதியின் கரையோரப் படிக்கட்டுகளிலும் நதியின் இருபுற வீதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்தக் காட்சிகளை நேரிலும் கண்டுகளிக்கவுள்ளனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-07-2024


0 comments

Comments


You can support my work

bottom of page