top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நியூ கலிடோனியா சுதந்திர ஆதரவு இயக்கத் தலைவர் தடுப்புக்காவலில்!

கலவரத்தை திட்டமிட்டதாக

குற்றம் சுமத்தி விசாரணை

படம் :சுதந்திர ஆதரவு இயக்கத்தின் தலைவர் கிறிஸ்டியன் ரெய்ன்.


பாரிஸ், ஜூன் 26


நியூ கலிடோனியாவுக்கு சுயாட்சி கோரும் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்டியன் ரெய்ன் (Christian Tein) உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.


கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட

இவர்கள் தலைநகர் நௌமியாவில் இருந்து விசேட விமானம் ஒன்றில் பிரான்ஸ் பெருநிலப்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு வழக்கு விசாரணைக்கு முந்திய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று

கலிடோனியாவின் உள்ளூர் அரச வழக்கறிஞர் அலுவலகம்

தெரிவித்துள்ளது. பிரான்ஸின் முலூஸில்(Mulhouse) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற கிரிஸ்டியன் ரெய்ன் வன்முறைகளைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தி விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது.


கலிடோனியாவின் விடுதலைக்கான களச் செயற்பாட்டு ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவரான ரெய்ன் கைதாகிப் பிரான்ஸ் கொண்டுவரப்பட்டதை அடுத்து அங்கு புதிதாக வன்முறைகள் மூண்டுள்ளன எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியமாகிய நியூ கலிடோனியாத் தீவுகளில் அண்மையில் கட்டுக்கடங்கா வன்செயல்கள் கட்டவிழ்ந்தமை வாசகர்கள் அறிந்ததே. அங்கு வசிக்கின்றவர்களது வாக்களிக்கும் உரிமை தொடர்பில் பாரிஸில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றை எதிர்த்தே அங்கு பெரும் வன்முறை வெடித்திருந்தது.அது வாரக்கணக்கில் நீடித்தது. வீதிகள் முடக்கப்பட்டன.

விமான நிலையம் மூடப்பட்டது. பிரான்ஸ் அரசு தீவு முழுவதும் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தது.


பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்திய மிக மோசமான இந்த வன்முறைகளில் இரண்டு பொலீஸ் காவலர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.


நியூ கலிடோனியாவில் குடியேறி அங்கு பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் வசிக்கின்ற பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகின்ற சட்டத் திருத்தம் ஒன்றை பிரான்ஸின் நாடாளுமன்றம் நிறைவேற்றியிருந்தது.அது ஜனநாயக ரீதியாக நியாயமானது என்று அதனை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத் திருத்தம் தீவின் உள்ளூர்வாசிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது. வந்தேறுகுடிகளை வாக்களிக்க அனுமதிப்பது நியூ கலிடோனியாவின் பழங்குடிகளான கனாக்(Kanak) இன மக்களை ஓரங்கட்டி அவர்களது வாக்களிப்பு வீதத்தைக் குறைத்துவிடும் என்பது சட்டத்தை எதிர்ப்போரது வாதமாக உள்ளது.


சுயாட்சியை ஆதரிப்போர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.


🔵நியூ கலிடோனியாவின் அமைதியின்மை தொடர்பான பின்னணித் தகவல்களை அறிந்துகொள்வதற்கு தாஸ்நியூஸின் கீழ்வரும் செய்தி இணைப்புகளுக்குச் செல்லுங்கள் :



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-06-2024

0 comments

Yorumlar


You can support my work

bottom of page