top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நிர்வாக சேவையின் பெண் அதிகாரியை பிரதமர் பதவிக்கு நிறுத்துகின்றது இடதுசாரி முன்னணி

லூசியின் நியமனத்தால்

ஆச்சரியமும் வரவேற்பும்

பாரிஸ், ஜூலை 23


கட்சி அரசியலுக்கு வெளியே இருந்து - சிவில் சமூகத்தைச் சேர்ந்தவரான - பெண் அரசுப் பணியாளர் ஒருவர் பிரான்ஸின் அடுத்த பிரதமராக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு முன்னணி(Nouveau Front Populaire) நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் - கூட்டணிக் கட்சிகளது ஒருமித்த இணக்கப்பாட்டுடன் தனது பிரதமரைத் தெரிவு செய்திருக்கிறது.


நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியும்

பாரிஸ் மாநகரசபையின் நிதி இயக்குநரும் சமூக நீதிக்காக உரத்துக் குரல்கொடுத்துவருபவருமாகிய லூசி கஸ்ரெற்ஸ் (Lucie Castets) என்ற பெண்ணையே பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள புதிய மக்கள் முன்னணி அவரது தலைமையில் அரசமைப்பதற்கான அனுமதியை அரசுத் தலைவர் மக்ரோனிடம் கோரியிருக்கிறது. ஆனால் இன்றையதினம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய மக்ரோன், லூசியின் நியமனத்தை உடனடியாக ஏற்க மறுத்திருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் வரை நாட்டின் ஸ்திரநிலை கருதி கப்ரியேல் அட்டால் தலைமையிலான தற்போதைய காபந்து அரசே தொடர்ந்து பதவியில் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


இடதுசாரி முன்னணியின்(Nouveau Front Populaire) இந்த நியமனம் அரசியல் மட்டங்களில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் சமூக ஊடகங்களில் பெரு வரவேற்பையும் பெற்றுள்ளது.


37 வயதான லூசி நாட்டின் வட மேற்கே

Caen என்ற இடத்தில் பிறந்தவர். நாட்டு மக்களால் பெரிதும் அறியப்படாதவர். இதற்கு முன்பு அரசியல் பதவிகள் எதனையும் வகிக்காதவர். பிரான்ஸின் மதிப்பு மிக்க அரசறிவியல் பல்கலைக்கழகத்தினதும் (Sciences Po) லண்டன் பொருளியல் கல்லூரியினதும் (London School of Economics) பட்டதாரி. 2014 இல் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற திறைசேரியின் பணிப்பாளர் நாயகமாகப் பதவியேற்ற அவர் பின்னர் பிரான்ஸின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் சர்வதேச திணைக்களத்துக்குத் தலைமையேற்றார். அதன் பிறகு 2020 முதல் பாரிஸ் மாநகரசபையின் நிதி மற்றும் வரவுசெலவுத் திட்ட ஆலோசகராக (Finance and Budget Advisor) விளங்கி வருகிறார்.


பிரெஞ்சு சோசலிஸக் கட்சியின் தீவிர ஆதரவாளரான லூசி, பொதுநிர்வாக சேவைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக அறியப்பட்டவர். "நெருக்கடிகளும் சீர்குலைவுகளும்" நிறைந்த தற்போதைய சிவில் நிர்வாக சேவைகளை மாற்றியமைக்க வேண்டியது "மிக அவசரமானது" என வலியுறுத்திவருபவர். மிக முக்கியமாக மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தையும் ஓய்வுபெறுகின்ற வயதை அதிகரிப்பதையும் கடுமையாக எதிர்த்து வருபவர்.


-இவ்வாறான ஒருவரையே சோசலிஸக் கட்சியை உள்ளடக்கிய இடதுசாரி மக்கள் முன்னணி தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.


அதிக ஆசனங்களை வென்ற அணி என்ற அடிப்படையில் இடதுசாரி முன்னணியின் வேட்பாளரைப் பிரதமராக நியமித்து அவரது தலைமையில் அரசு அமைவதற்கான வாய்ப்பை மக்ரோன் வழங்க வேண்டும்.


பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரியாகிய ஜோன் லூக் மெலன்சோன் அவர்களது கட்சி ஆகியனவற்றை உள்ளடக்கிய பரந்து பட்ட அரசியல் கூட்டணி புதிய மக்கள் முன்னணி (Nouveau Front populaire) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு அதிக ஆசனங்களை வென்றமை வாசகர்கள் அறிந்ததே.


577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தக்க வைப்பதற்கு 289 ஆசனங்களாவது அவசியம். தேர்தலில் போட்டியிட்ட முக்கிய மூன்று தரப்புகளில் எதனாலும் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை. இடது சாரிகளது மக்கள் முன்னணி 195 ஆசனங்களுடன் முதலிடத்திலும் -


அதிபர் மக்ரோனின் ஆளுங்கட்சி அணி

164 ஆசனங்களுடன் இரண்டாம் இடத்திலும் -


மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிகள் 143 ஆசனங்களுடன் மூன்றாவது ஸ்தானத்திலும் இருப்பது தெரிந்ததே.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

0 comments

Comments


You can support my work

bottom of page