top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நாளொன்றுக்கு 4 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்கும் இளம் பிரதமர்!

போதிய உறக்கமின்மை உடல்நலத்துக்குக் கேடு

நிபுணர்கள் எச்சரிக்கை


இளம் தலைமுறையினரிடையே நித்திரை குறைந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இரவின் நீளம் குறுகி வருகிறது. இரவிரவாக விழித்திருந்து விட்டுப் பகலில் தூங்கும் பழக்கமும் இளம் பிள்ளைகளது புதிய வழக்கமாகிவருகிறது.


பிரான்ஸின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கின்ற 34 வயதான கப்ரியேல் அட்டால் சிறிதும் உறங்காமல் நாட்கணக்கில் தொடர்ந்து

சளைக்காமல் பணியாற்றுபவர் என்ற தகவலைப் பாரிஸ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. "வார நாட்களில் உறங்காமல் தொடர்ச்சியாகப் பணியாற்றிவிட்டு

வார இறுதி நாட்களில் நன்றாகத் தூங்குகிறார்" என்று பத்திரிகை ஒன்று குறிப்பிடுகிறது.


நாட்டின் வரலாற்றில் வயதில் குறைந்த

பிரதமரது பழக்க வழக்கங்கள் பெரும் பாலும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் காணப்படுகின்ற பல்வேறு வழக்கங்களோடு ஒத்துப் போவதை அந்த ஊடகங்கள் பட்டியலிட்டுக் காட்டியுள்ளன. அவர் "நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் உறங்குவதேயில்லை" - என்று பரிஷியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

அடிக்கடி கொக்காகோலா அருந்துபவர், நகம் கடிப்பவர்.. டிஜிட்டல் திரைகளில் மூழ்குபவர் என்று பிரதமரது பழக்க வழக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன.


பிரதமரது பழக்க வழக்கம் பற்றிய செய்திகளில் நித்திரை தொடர்பான நிபுணத்துவ மருத்துவர்களது கருத்துக்களும் சேர்த்தே பகிரப்பட்டு வருகின்றன.


தூக்கம் தொடர்பான மருத்துவ நிபுணர்கள், தூக்கமின்மை பல்வேறு உடல், உளப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு ஆபத்தான நோய்களை (chronic illnesses) ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளனர்.


🔴நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவு


"உறக்கம் உங்களை உடலியல் ரீதியாக மீள உருவாக்க அனுமதிக்கிறது" என்று ஜொனாதன் தையெப் (Jonathan Taieb) என்ற நிபுணர் விளக்குகிறார். போதுமான மணித்தியாலங்கள் மிகத் தரமான தூக்கம் "நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்கு" அனுமதிக்கிறது, ஏனெனில் அது உங்கள் உடலில் "பகலில் திரட்டப்பட்ட நச்சுகளை அகற்றுகிறது"-என்று அவர்

தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


🔴சாதாரண நோய்கள் கூட

சட்டெனத் தொற்றும்!


போதிய தூக்கம் இன்மை சளி. காய்ச்சல் போன்ற சாதாரண நோய்கள் கூட இலகுவில் தொற்றுவதற்கு இடமளிக்கும். ஏனெனில் உடலில் போதுமான சைற்றோகைன்ஸ்கள் (cytokines) சுரக்காது. போதிய தூக்கம் இல்லாத ஒருவர் நோயில் இருந்தோ அல்லது காயத்தில் இருந்தோ மீள்வது தாமதமாகும். ஏனெனில் அத்தகையோருக்கு உடல் அழற்சியின்

செயற்பாடு (inflammatory response)

கிடைக்காது. அல்லது குறையும்.


-இவ்வாறு "உறக்கத்துக்கான மன்றம்"

(Sleep Foundation) என்ற இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔴ஒவ்வாமையை அதிகரிக்கும்


சரியான உறக்கம் இன்மை ஒருவரது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒவ்வாமை உள்ளவர்களில் (allergy sufferers) அது "ஒரு தாக்குதலை"

ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.


🔴உடற்பருமன்


ஒரு இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாக உறங்கும் பழக்கமுடையவர்களுக்கு இருதய நோய்கள், புற்று நோய் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 30 முதல் 40 வீதங்கள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்குப் பின்னர் இறப்பு வீதத்தையும் அது அதிகரிக்கிறது.


சரியான தூக்கம் இல்லாமை இரத்த அழுத்தம் உடல் பருமன் போன்ற தீங்குகளையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் மனித உடலின் "திருப்தி" "பசி" போன்றவற்றுக்கான ஓமோன்களை("hormones of satiety and hunger,”) நல்ல உறக்கமே வழிநடத்துகிறது என்று கூறுகிறார் நிபுணர் ஜொனாதன் தையெப்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

18-01-2024

0 comments

Commentaires

Les commentaires n'ont pas pu être chargés.
Il semble qu'un problème technique est survenu. Veuillez essayer de vous reconnecter ou d'actualiser la page.

You can support my work

bottom of page