top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நடுவானில் குழப்பம் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் ஒருவர் பலி! 23 பேர் காயம்!!

பயண வழியில் "போயிங்"

கொந்தளிப்பில் சிக்கியது

ஆறாயிரம் அடிகள் வரை

கீழே பொத்தென வீழ்ந்தது


பாரிஸ், மே 21


லண்டனில் இருந்து நேற்றிரவு சிங்கப்பூர் புறப்பட்ட போயிங் விமானம் ஒன்று இடைநடுவே - வங்காள விரிகுடாவுக்கு மேலே- கடும் வளிக் கொந்தளிப்பில் சிக்கியதில் பயணி ஒருவர் அதிர்ச்சியால் உயிரிழந்தார். ஒன்பது விமானப் பணியாளர்கள் உட்பட 23 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களில் ஏழு பேர் ஆபத்தான கட்டத்தில் இருந்துள்ளனர்.


உயிரிழந்தவர் 73 வயதுடைய பிரிட்டிஷ் பயணி என்றும் அதிர்ச்சியால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்

தெரிவிக்கப்படுகிறது.


ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் நேரப்படி நேற்றிரவு 22..30 மணிக்கு 211 பயணிகளுடன் புறப்பட்ட சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 (Boeing 777) பயணிகள் விமானமே இவ்வாறு நடுவானில் அனர்த்தத்தில் சிக்கியது.

கடும் வளி அமுக்கக் கொந்தளிப்பில் (severe turbulence) சிக்கிய அந்த விமானம் ஒரு கட்டத்தில் பறந்துகொண்டிருந்த உயரத்தில் இருந்து மூன்று நிமிட நேரத்தினுள் சுமார் ஆறாயிரம் அடிகள் கீழே வீழ்ந்ததைப் பயணப் பதிவுத்

தரவுகள் (Tracking data) காட்டியுள்ளன. அதனால் விமானத்தின் உள்ளே பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. ஆசனப் பட்டி அணிந்திருக்காத பயணிகள் கூரையோடு மோதப்பட்டுத் தலையில் காயமடைந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகித் தரையில் வீழ்வதாக எண்ணிப் பயணிகள் மரண பீதியடைந்தனர் என்று கூறப்படுகிறது. பலரும் அலறத் தொடங்கினர். கடும் குலுக்கத்தினால் சிலர் அங்கும் இங்குமாக வீசப்பட்டுக் காயமடைந்தனர். விமானத்தின் உட்பகுதிகள் சேதமடைந்துள்ளன.

சில மணி நேரப் போராட்டத்தின் முடிவில் அந்த விமானம் திசை திருப்பப்பட்டுத் தாய்லாந்தின் பாங்கொக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் அங்கு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இந்தத் திகில் சம்பவத்தின் அனுபவங்களைப் பயணிகள் பலரும் பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

21-05-2024




0 comments

Comments


You can support my work

bottom of page