top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

நண்பகல் வரை 25.90 % வாக்களிப்பு! கடந்த தேர்தல்களை விட அதிகம்

இன்று முதல் சுற்றிலேயே

தெரிவாகின்றவர்கள் யார்?

படம் :அதிபர் மக்ரோன் தனது சொந்த தொகுதியாகிய Touquet (Pas-de-Calais) இல் வாக்களித்த போது...

 

பாரிஸ், ஜூன் 30


பிரான்ஸ் பெருநிலப்பரப்பில் காலை எட்டு மணிக்கு வாக்களிப்புத் தொடங்கியது. நண்பகல் 12 மணிவரை 25.90% வாக்குகள் பதிவாகின என்று அறிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிட்டால் இன்றைய இடைத் தேர்தலில் முற்பகல் பதிவான வாக்கு வீதம் அதிகமாகும். பிரான்ஸின் தேர்தல்களில் மதியத்துக்கு முந்திய வாக்குப் பதிவை ஆய்வு செய்பவர்கள் இது 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிக வாக்களிப்பு வீதம் என்று குறிப்பிடுகின்றனர்.


🔵2024-25.90%


🔵2022-18.43%


🔵2017-19.24%


இன்றைய முதற் சுற்றில் பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமாகிய Bouches-du-Rhône பகுதியிலேயே மிக அதிகளவானோர் (33.70%) காலையில் வாக்களித்திருக்கின்றனர். நண்பகல் வரை மிகக் குறைந்த வாக்களிப்பு வீதம் பாரிஸின் புற நகரங்களை உள்ளடக்கிய Seine-Saint-Denis பகுதியில் (17.93%) பதிவாகியுள்ளது.


வேட்பாளர் ஒருவர் இன்றைய முதற்சுற்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவர் தனது தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும்-


அல்லது அவரது தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளரது எண்ணிக்கையில் 25 சதவீதமானோரது ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும் -


அவ்வாறு எவரும் வெற்றி பெறாத தொகுதிகளில் ஜூலை 7 ஆம் திகதி இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்படும்.


முதற்சுற்றிலே முதல் இரு இடங்களைப் பெறுகின்ற வேட்பாளர்களும் அதே தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 12.5% வீதத்துக்கும் அதிகமானோரது வாக்குகளைப் பெற்றவர்களும் இரண்டாவது சுற்றுக் களத்தில் நிற்க முடியும். ஆகவே ஒரு தொகுதியில் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடவாய்ப்புண்டு.


ஆனால் அதிக வாக்குப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு அவரது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக-ஏனைய போட்டியாளர்களில் எவரும் போட்டியிலிருந்து விலகி அவருக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தலாம்.


நிர்வாகத் தீவுகளில்

அதிக வாக்களிப்பு


பிரான்ஸின் பெருநிலப்பரப்புக்கு வெளியே கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் இம்முறை வாக்களிப்பு வீதம் கடந்த தேர்தலை விடவும் அதிகமாகக் காணப்படுகிறது.


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விரிவான செய்திகளை அறிய தாஸ்நியூஸ். கொம் இணையத்துடன் இணைந்திருங்கள்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-06-2024


0 comments

Comments


You can support my work

bottom of page