சொலிங்கன் கத்தி வெட்டு
ஐஎஸ் குழு உரிமை கோரல்
பலஸ்தீன மக்களுக்காக
பழிதீர்க்கும் தாக்குதலாம்
பாரிஸ், ஓகஸ்ட் 25
ஜேர்மனியில் சொலிங்கன் நகரில் நடத்தப்பட்ட கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ் என்கின்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழு உரிமைகோரியிருக்கிறது. அதேசமயம் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்டு வருகின்ற பாரிய தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கிவாழும் இல்லம் ஒன்றை ஜேர்மனியப் பொலீஸ் கொமாண்டோக்கள் நேற்றிரவு முற்றுகையிட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின் போது தாக்குதலாளியான 26 வயதுடைய சிரிய நாட்டு இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் காணப்பட்ட அவர் தானாகவே முன் வந்து பொலீஸாரிடம் சரணடைந்ததுடன் மூன்று பேரை வெட்டிக் கொன்ற தாக்குதலைப் புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜேர்மனியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அல் ஈஸா (Issa al H) எனப்படுகின்ற
அந்த வாலிபர் சிரியாவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜேர்மனிக்கு வந்துள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகளுடன் அவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது, ஒரு ஜிஹாத் போராளியாக அவர் எவ்வாறு மாறினார் என்பன போன்ற விவரங்கள் தெரியவந்துள்ளன என்று விசாரணையாளர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அத்துடன் புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படவேண்டிய உத்தரவின் கீழ் இருந்த வேளை அதற்கான காலஅவகாசம் காலியான நிலையில் தலைமறைவாகியிருந்தார் என்ற தகவலையும் பொலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு மிக அருகே முந்நூறு மீற்றர்கள் தூரத்தில் அமைந்திருந்த அகதிகள் இல்லமே சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலாளி பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்ற கத்தி இந்த இல்லத்தில் இருந்து 150 மீற்றர்கள் தொலைவில்
கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்தே இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நகரத் திருவிழாக் கொண்டாட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட கத்தி வெட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். எட்டுப் பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே.
கத்தியால் கண்டபடி வெட்டி இந்தக் கொடூரத்தைப் புரிந்த இந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார். அவரைத் தேடிப்பிடிப்பதற்கான பாரிய பொலீஸ் வேட்டை 26 மணி நேரத்தைக் கடந்த பிறகே அவர் சிக்கியிருக்கிறார்.
ஐஎஸ் என்கின்ற இஸ்லாமிய தேசம் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும்
அமாக் (Amaq) செய்திச் சனல் வெளியிட்டிருக்கின்ற தகவலில் ஜேர்மனியில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதல் தங்களது இயக்கத்தின் படை வீரர் ஒருவராலேயே நடத்தப்பட்டது என்று உரிமைகோரியிருக்கிறது.
இஸ்லாமியரது இந்தத் தாக்குதல்
பலஸ்தீனிய முஸ்லிம்களுக்காகப் பழி வாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
டுசுல்டோவில் (Düsseldorf) இருந்து 25கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள சொலிங்கன் நகரம் இரும்புத் தொழிற்சாலைகளால் புகழ்பெற்றது. அந்த நகரம் நிறுவப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய பெரு விழாவிலேயே கத்தி வெட்டு அனர்த்தம் நிகழ்ந்தது.
⚫முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ச-ல-ங-கன-நகரத-த-ர-வ-ழ-வ-ல-கத-த-வ-ட-ட-ம-வர-பல-த-க-க-தல-ள-ஓட-டம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
25-08-2024
Comments