top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

புடினைக் கைது செய்யாதது ஏன்? மங்கோலியா விளக்கம்..!

".... மன்னிக்கவும் எங்கள்

கைகள் கட்டப்பட்டுள்ளன.."


தாஸ்நியூஸ்-செய்திச் சேவை


பாரிஸ், செப்ரெம்பர், 5


"அனைவரும் மன்னிக்கவும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன."


-புடினைக் கைதுசெய்கின்ற பிடியாணையை நிறைவேற்றத் தவறியமைக்காக இவ்வாறு சர்வதேச சமூகத்திடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளது மங்கோலிய அரசு.


தமது நாடு அதன் மின்சாரம் மற்றும் எரிபொருள் தேவைகளுக்காக முழுவதும் ரஷ்யாவில் தங்கியிருக்கும் கட்டாயம் இருப்பதால் புடினைக் கைது செய்யும் விடயத்தில் தங்கள் கரங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற சாரப்பட மங்கோலிய அரசின் பேச்சாளர் ஒருவர்

கருத்துத் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய அதிபர் புடின் கடந்த செவ்வாயன்று மங்கோலியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதன் போது அவர் அங்கு வைத்துக் கைதுசெய்யப்படுவாரா என்ற கேள்வியைச் சர்வதேச செய்தி ஊடகங்கள் கிளப்பியிருந்தன.

புடினைக் கைது செய்யுமாறு உக்ரைனும் மேற்கு நாடுகளும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகளும் மங்கோலிய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

உக்ரைனில் புரிந்த போர்க் குற்றங்களுக்காக புடினைக் கைது செய்யும் சர்வதேச பிடியாணையை நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court - ICC)விடுத்திருப்பது வாசகர்கள் அறிந்ததே.


இவ்வாறான சர்வதேச பிடியாணை ஒன்றை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகள் அனைத்துக்கும் உள்ளது. மங்கோலியா அவ்வாறான குற்றவியல் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் அடங்கியுள்ள அதன் உறுப்பு நாடு என்பதால் குற்றம் சுமத்தப்பட்ட நபராகிய புடின் அந்த மண்ணில் கால் பதித்தால் அவரைக் கைதுசெய்து செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய பொறுப்பு ரோம் உடன்படிக்கையின் கீழ் அதற்கு உள்ளது. இவ்வாறான சட்டப் பின்னணியிலேயே அதிபர் புடின் மங்கோலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதனை நிறைவு செய்துகொண்டு மொஸ்கோ திரும்பி

விட்டார். எதிர்பார்க்கப்பட்டது போல் எதுவும் நிகழவில்லை.

3.3 மில்லியன் மக்கள் தொகையுள்ள

மங்கோலியா வடக்கே ரஷ்யாவையும் தெற்கே சீனாவையும் எல்லைகளாகக் கொண்டு இரண்டு வல்லரசுகளுக்கும் இடையே அமைந்துள்ள - நிலத்தால் சூழப்பட்ட- ஒரு நாடு ஆகும். அதன் மிக முக்கியமான அமைவிடம் காரணமாக அது பூகோள அரசியல் மையத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டு அயல் நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் உறவுகளைப் பேணுவதில் அந்நாடு "கயிற்றில் நடக்கின்ற" ராஜதந்திரத்தைப் பேணி வருகிறது.


மங்கோலியா அதன் 95 வீதமான எரிபொருள், 20 வீதமான மின்சாரம் என்பவற்றின் இறக்குமதிக்கு அயல் நாட்டில் தங்கியுள்ளது. இந்த விநியோகங்கள் எங்களதும் நாட்டு மக்களினதும் இருப்பை உறுதிப்படுத்த அத்தியாவசியமானவை என்று அந்நாட்டு அரச பேச்சாளர் ஒருவர் பொலிரிக்கோ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

மங்கோலியா விஜயத்தின் போது தலைநகர் உலான்பத்தாரில் (Ulaanbaatar) ரஷ்ய அதிபருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.


1939 இல் ஜப்பானுக்கு எதிராக நடந்த ஹால்ஹின் கோல் சண்டையில் (Battle of Khalkhin Gol) முன்னாள் சோவியத் - மங்கோலிய நாடுகளின் படைகள் கூட்டாகப் பெற்ற வெற்றியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அத்துடன் எதிர்வரும் ஒக்ரோபரில் மொஸ்கோவில் நடைபெறவுள்ள பிறிக்ஸ்(BRICS) நாடுகளது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மங்கோலிய அதிபர் உக்னா ஹரல்சுக்குக்கு (Ukhnaa Khürelsükh) அழைப்பு விடுத்தார்.


ரோம் உடன்படிக்கையின் கீழ் புடினைக் கைதுசெய்யத் தவறியதற்காக மங்கோலியா விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


⚫தொடர்புடைய செய்தி :

மங்கோலியாவில் கால் பதித்த முதல் பிரெஞ்சு அதிபர் https://www.thasnews.com/post/மங-க-ல-ய-வ-ல-க-ல-பத-க-க-ம-ம-தல-ப-ர-ஞ-ச-அத-பர



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-09-2024

0 comments

Comments


You can support my work

bottom of page