top of page
Post: Blog2_Post

பாடவேளைகளில் ஸ்மார்ட் போன் தடை! பரிசோதிக்கக் கல்வி அமைச்சர் விருப்பம்

கற்றல் மீதான கவனத்தை

அது குறைப்பதாக ஆய்வு


மாணவரிடையே வன்முறை

சமூக ஊடகங்களே மையம்


பாரிஸ், ஏப்ரல் 8


பாடசாலை மாணவர்களை-குறிப்பாக இடைநிலை மாணவர்களைச் - சமூக வலைத்தள ஊடகங்களின் தாக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதற்காகப் பாடவேளைகளில் ஸ்மார்ட் போன் பாவிப்பதில் இருந்து அவர்களைத் தள்ளி இருக்கச் செய்வதற்கான "டிஜிட்டல் இடைவேளையை" (“digital break”-pause numérique) ஏற்படுத்துவதற்கு

உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இளவயது மாணவர்கள் கல்லூரிகளில் குறைந்தது எட்டு மணி நேரம் தங்கள் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்கின்ற விதமாகப் பரீட்சார்த்த முயற்சிகளை அரசு ஆரம்பிக்கவுள்ளது.


தேசிய கல்வி அமைச்சர் நிக்கோல் பெல்லோபெற் (Nicole Belloubet) நேர்காணல் ஒன்றில் இத்தகவலை

வெளியிட்டிருக்கிறார்.


மாணவர்கள் கல்லூரிக்குள் பிரவேசிக்கின்ற போது

வாயிலில் தங்கள் ஸ்மார்ட் போன்களைக் கைவிட்டு உள்ளே செல்வது போன்ற ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு பரிசோதிக்க உள்ளது.


பிரான்ஸில் அண்மைய ஆண்டுகளாக பதின்ம வயதுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் தலையெடுத்துள்ள வன் முறைகள் மற்றும் துன்புறுத்தல்களின் மையத்தில் அதற்கான முக்கிய கருவியாக ஸ்மார்ட் போன்களும் சமூக ஊடகங்களும் இருப்பதை விசாரணை முடிவுகள் காட்டுகின்றன. பாடசாலைச் சூழலில் சமூக ஊடகக் குழுச் செயற்பாட்டின் மூலம் கண்களுக்குத் தெரியாமல் நிகழ்த்தப்படுகின்ற துன்புறுத்தல்கள் காரணமாக மாணவர்கள் பலர் உயிர்மாய்த்திருக்கின்றனர்.


துன்புறுத்தல்களும் குழு வன்முறைகளும் வகுப்பறைகளின் உள்ளேயே படமாக்கப்பட்டு அவை சமூக ஊடகங்களில் நேரடிக் காட்சிகளாகப்

பகிரவிடப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகப் பாடசாலைகளுக்கு வெளியே தாக்குதல்கள், குழு மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.


இவ்வாறு இளம் கல்விச் சமூகம் சமூக ஊடகங்களின் நேரடியான தாக்கத்தில் சிக்கிச் சீரழிவது பெற்றோர்களையும் கல்விச் சமூகத்தையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கி வருகிறது.


இவ்வாறான நிலைமையை அடுத்தே பாடசாலைகளின் உள்ளே ஸ்மார்ட் போன் பாவனையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான "யுனெஸ்கோ" கடந்த ஆண்டு வெளியிட்ட கல்வி மீதான உலகளாவிய கண்காணிப்பு மதிப்பீட்டு அறிக்கை, பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பாவனை தொடர்பான பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி இருந்தது.


ஸ்மார்ட் போன் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை உள்ளடக்கிய பாடவிதானங்களின் போதனைக்கு மாத்திமே மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

14நாடுகளில் ஆரம்பப்பிரிவு முதல் உயர்கல்வி வரையான வகுப்புகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு ஸ்மார்ட் போன் பாவனை வகுப்பறைக் கல்வியில் குழப்பங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.


இதேவேளை,


அதிபர் எமானுவல் மக்ரோன்

குழந்தைகளும் சிறுவர்களும் வீடுகளிலும் வகுப்பறைகளிலும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கட்டுப்படுத்துவது என்பதில் அறிவியல் ரீதியான ஒருமித்த கருத்தைப் பெற்றுக் கொள்வதற்காகக் குழு ஒன்றை நியமித்திருக்கிறார்.அந்த குழுவின்

முடிவுகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில்

திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-04-2024




0 comments

Comments


You can support my work

bottom of page