top of page
Post: Blog2_Post
Writer's pictureKarthigesu Vasuki

பெண்ணே நீயும் பெண்ணா? ஒலிம்பிக் சர்ச்சை

_________செய்திக் கட்டுரை

பெண்களுக்கான குத்துச்சண்டை உலகில் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ள பெயர் இமானே காலிஃவ்  (Imane Khalif); இவர் பெண்ணே இல்லை என்பதே அந்த விமர்சனம்.


பெண்களுக்கு,உரிய சமத்துவம் தராத,அல்ஜீரிய நாட்டில், கிராமம் ஒன்றில், பின்தங்கிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் தான் இந்த Khalif.


பெண் ஒடுக்குமுறையும், போதிய வருமானம் இன்மையும் மட்டுமன்றி, அவரது தந்தையின் மறுப்பும் அவரது விளையாட்டு ஆர்வத்துக்கு தடையாக இருந்தது.


ஆனால் தெருவோரங்களில் பாண் விற்றும், பாதைகளில் கிடக்கும் போத்தல்கள் மற்றும் தகரங்களை சேகரித்து விற்றும் பணமீட்டி, மிகவும் கடினமான பாதைகளினூடு தன் குத்துச்சண்டை மீதான ஆர்வத்தை தொடர்ந்தார்.


ஈற்றில் தனது இலக்கை நிலைநாட்டி, அல்ஜீரிய நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனையாக, உலக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.


கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் "உலக குத்துச்சண்டை சம்மேளனம்" நடத்திய ( IBA ) உலக குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி, அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனையும் தொடர் வெற்றிகளை பெற்றவருமான Azalia Amineva ஐ வென்று, இறுதிப் போட்டிக்கு தெரிவானார்.


ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்பதாக, Khalif தகுதி நீக்கம் செய்யப்ட்டதாக IBA திடீரென்று அறிவித்ததுடன், வருங்காலத்தில் அவர் எந்த ஒரு உலக குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்து கொள்வதையும் தடை செய்தது.அவரது டெஸ்ரோஸ்ரோன் (testosterone)அளவு அதிகமாக உள்ளதாகவும் அது காரணம் சொன்னது.


இது ரஷ்யாவின் Azalia Amineva இறுதிப் போட்டியில் கலந்து வெற்றியை பெற்றுக் கொள்ளவும், தனது தொடர் வெற்றிகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளவும் வழி அமைத்தது.


IBA,  ரஷ்யாவைச் சேர்ந்த Umar kremlev என்பவரை தலைவராகவும், ரஷ்யாவின் முக்கிய நிறுவனம் ஒன்றை பிரதான நிதி வழங்குனராகவும் கொண்டு இயங்குகிறது.


தலைவர் உமருக்கு எதிராக நிதி மோசடி,போதைப்பொருள் கடத்தல்,தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும்,IBA மீது நிதி மற்றும் உள்ளக விடயங்களில் வெளிப்படைத்தன்மை இன்மை தொடர்பான குற்றச்சாட்டுகளும் உள்ளன.


இது இவ்வாறு இருக்க நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 66 kg எடை (welterweight)பிரிவின் 8வது இறுதிப் போட்டியில் Khalif ம் இத்தாலி நாட்டின் Angela Carini ம் போட்டியிட்டனர்.


சிறு வயதில் இருந்தே தனது தந்தையாரால் பயிற்றுவிக்கப்பட்டவர் Carine. "புலி" என்று தந்தையால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், ஒலிம்பிக் பதக்கத்தை வென்று 2023 இல் இறந்து போன தனது தந்தைக்கு அர்ப்பணிக்கும் பெருங்கனவோடு வந்தவர்.


ஆனால் போட்டியின் 46வது செக்கனிலே Khalif இன் தாக்குதலில் நிலைகுலைந்து போன Carine போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்;நடுவர் khalif வை வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்குப் பின் கைகுலுக்கவும் ஆறுதல் கூறவும் khalif முயன்ற போது Carine அதனை தவிர்த்ததுடன் அழுதபடி, இது நியாயமற்ற போட்டி என்று தெரிவித்தார்.


இது ஊடகங்களில் பேசு பொருளாகி உலகின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலரும் ஆளாளுக்கு khalif க்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததனர்.

IBA உம் தன் பங்கிற்கு khalif ஆல் தோற்கடிக்கப்பட்ட Carini ஒலிம்பிகில் தங்கம் வென்றால் கிடைக்கக்கூடிய 75ஆயிரம் அமெரிக்க டொலர்களை அளிப்பதாகவும் இதில் கால் பகுதி Carini யின் பயிற்சியாளருக்குரியது என்றும் அறிவித்துள்ளது.


இத்தனை பிரச்சினைகளுக்கு பின் Carini தான் நடந்து கொண்ட விதத்துக்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளதுடன், Khalif ஐ கண்டால் தான் தழுவிக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார் .


"தனது ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்து போனதே"தனது அன்றைய வெளிப்பாட்டுக்கு காரணம் என்பதையும் அவர் இங்கு தெரிவித்துள்ளார்.


ஒருவர் கனவு காண்பதும் நம்பிக்கை வைப்பதும் அதற்காக முயல்வதும் அவரவர் உரிமை.அது இல்லாமல் போகும் நிலை அவரவரை நிலை தடுமாறச் செய்வதும் இயல்பே.


ஆனால் தனது கனவு கலைந்ததற்காக இன்னொருவரை உலகம் பழி சொல்ல விடுவதும்,எப்போது யாராவது வீழ்வார்கள் அவர் மீது சேறு இறைப்போம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் விழுத்தடிப்பதும் தான் இன்னும் விந்தையாக இருக்கிறது.


குறிப்பு:

1) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க Khalif தகுதியானவர் என்று உலக ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டே போட்டிகளில் பங்கேற்கிறார்.


2) XX குரோமோசோம்கள் உள்ளவர்கள் பெண்கள் எனவும், XY குரோமோசோம்கள் உடையவர்கள் ஆண்கள் எனவும் இனம் காட்டினாலும் XY குரோமசோமுடைய பெண்களும் உள்ளனர்.


3) IBM ஆல் செய்யப்பட்ட தகுதி காண் பரிசோதனை பற்றி கேட்க பட்ட போது முதலில் குரோமசோம் பரிசோதனை என்றும், பின்னர் அது வெளிப்படையாக கூற முடியாத பரிசோதனை என்றும் அது கூறி விட்டது.


4) சமுக ,சமய, பாலின இறுக்கமுள்ள அல்ஜீரிய நாட்டில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை என்பது சட்டங்களின் உள்கட்டமைப்புகளின் ஊடாக தடைசெய்யப்பட்ட விடயம்.


5) சமுகவலைத்தள தனிநபர் தாக்குதல், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள்

உட்பட பல எதிர்ப்புகளின் மத்தியில் 3ம் திகதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியிலும் மீண்டும் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளார் Imane khalif.


6) IBA என்பது தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களை வழிநடத்தவும்,உலக தரம்மிக்க போட்டிகளை ஒழுங்கு செய்யவும்,வீரர்களை ஊக்குவிக்கவும்,வீரர்களை தரநிலைப்படுத்தவும் என உருவாக்கப்பட்ட அமைப்பாக இருந்தது.இது ஒலிம்பிக் சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தது.ஆனால் இதன் நம்பகத்தன்மை அற்ற செயல்பாடுகள் காரணமாக, உலக ஒலிம்பிக் அமைப்பு இதன் உறுப்புரிமையை அற்றதாக்கி விட்டது.


___________ வாசுகி குமாரதாஸன்

06/08/2024

0 comments

Comments


You can support my work

bottom of page