top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

புதிய பிரதமராக பெர்னாட் காசனெவ்?

அவரையும் ஹொலன்ட்

சார்க்கோசி மூவரையும்

மக்ரோன் பேச அழைப்பு!



பாரிஸ், செப்ரெம்பர் 2


ஜனாதிபதி மக்ரோன் யாரைப் பிரதமராக நியமிக்கப் போகிறார் என்ற கேள்வி பெரும் புதிராக இருந்து வரும் நிலையில் சோசலிஸக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பெர்னாட் காசனெவின்(Bernard Cazeneuve) பெயர் அரசியல் வட்டாரங்களில் அடிபட்டு வருகிறது.


அதை உறுதிப்படுத்தும் விதமாக அரசுத் தலைவர் மக்ரோன் அவரை நாளை திங்கட்கிழமை காலை எலிஸே மாளிகைக்கு அழைத்திருக்கிறார்.

பிரதமர் பதவியை ஏற்று அரசாங்கம ஒன்றை நிறுவுகின்ற பொறுப்பு அவரிடம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசனெவ்வுடன் முன்னாள் அதிபர்களான பிரான்ஷூவா ஹொலன்டையும் நிக்கலஸ் சார்க்கோசியையும் ஆலோசனைக்காக மக்ரோன் அழைத்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.


பெர்னாட் காசனெவ் சோசலிஸக் கட்சியின் அதிபர் ஹொலன்டின் காலத்தில் உள்துறை அமைச்சு உட்படப் பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர். 2016-2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறுகிய காலம் அதிபர் ஹொலன்டினால் பிரதமர் பதவியிலும் நியமிக்கப்பட்டவர்.


தேர்தலுக்குப் பின்பு நாடாளுமன்றத்தில் பிளவுபட்டிருக்கின்ற அரசியல் சக்திகளை ஒருமித்துக் கையாள்வதில்

பெர்னாட் காசனெவ் தேர்ச்சி வாய்ந்தவர், சகல தரப்புகளையும் அனுசரித்து, அணைத்துச் செல்லக் கூடிய ஆளுமை மிக்கவர என்று அவரை ஆதரிப்பவர்கள் நம்புகின்றனர்.


தீவிர வலதுசாரிகளையும் தீவிர இடதுசாரிகளையும் வெளியே வைத்து குடியரசின் சக்திகளை உள்ளடக்கிய ஒர் திறந்த - வெளிப்படையான-அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தனது இலக்கு என்பதை அதிபர் மக்ரோன் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளார்.


சோசலிஸக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவராகிய

காசனெவ் இடதுசாரிகள் மத்தியில் இருந்தும், வலதுசாரிகள் இடையே

இருந்தும் ஆதரவாளர்களைத் தம்பக்கம் திருப்பக் கூடியவர் என நம்பப்படுகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இணக்க அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆதரவைத் திரட்டவல்ல தலைவராக அவரை மக்ரோன் இனங்காண்கிறார் என்று அவதானிகள் கூறுகின்றனர். ஆனாலும் ஆசனங்கள் அடிப்படையில் முதனிலையில் உள்ள இடதுசாரிகளது புதிய மக்கள் கூட்டணி(Nouveau Front populaire) நிறுவப்பட்ட சமயத்தில் பெர்னாட் காசனெவ் அந்தக் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், பெர்னாட் காசனெவ் தலைமையில் நிறுவப்படக்கூடிய அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதனைக் கவிழ்ப்போம் என்று இடதுசாரிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய கட்சியாகிய La France Insoumise எச்சரித்துள்ளது. தங்களது கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டவரான லூசி கஸ்ரெற்ஸ் (Lucie Castets) என்பவரை பிரதமராக அறிவிப்பதற்கு

மறுத்துத் தனது கடமைகளை மக்ரோன்

உதாசீனம் செய்துள்ளார் என்றும் அக்கட்சி குற்றம் சுமத்தி இருப்பது வாசகர்கள் அறிந்ததே. கடமை தவறியதற்காக அரசுத் தலைவர் மீது குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கும் அந்தக் கட்சி முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளது.


இவ்வாறான பின்னணியில் நாட்டின் அரசியலில் அடுத்து வரவிருக்கின்ற நாட்கள் பெரும் பரபரப்பானவையாக

இருக்கப்போகின்றன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

01-09-2024




0 comments

Comments


You can support my work

bottom of page