30 கி.மீற்றர் முன்னேற்றம்
ஆபத்தான விளையாட்டா?
பாரிஸ், ஓகஸ்ட் 11
உக்ரைனியப் படைகள் முதல் முறையாக ரஷ்யாவின் எல்லை தாண்டி முன்னேறியிருக்கின்றன. ரஷ்யா கடந்த 2022 இல் ஆக்கிரமிப்புப் போரை ஆரம்பித்த பின்னர் உக்ரைனியப் படைகள் நேரடியாக அந்த நாட்டின் எல்லைக்குள் புகுந்து படை நடவடிக்கையில் - பகிரங்கமாக- ஈடுபடுவது இதுதான் முதல் முறை என்பதால் அது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் உக்ரைனிய எல்லையோரப் பிராந்தியமாகிய குர்க்ஸ் (Kursk) என்ற பகுதிக்குள்ளேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கொண்ட டாங்கிப் படைப் பிரிவு உள்நுழைந்திருக்கிறது.
கூடவே ட்ரோன்களை இயக்குகின்ற பொறியியல் பிரிவும் களத்தில் புகுந்துள்ளது. அந்தப் பகுதியில் மத்திய அணு மின் நிலையம் ஒன்று அமைந்திருப்பதால் சர்வதேச கவனம் அங்கே திரும்பியிருக்கிறது. இரண்டு தரப்புகளும் நிதானத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகவரகம் (International Atomic Energy Agency-IAEA)
அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
உக்ரைன் படைகள் சுமார் முப்பது கிலோ மீற்றர்கள் தூரம் முன்னேறி
ரஷ்யாவின் முக்கிய எல்லை நகரங்களை நெருங்கியுள்ளன என்று சுயாதீன செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டிய இந்தப் படை நடவடிக்கையை உக்ரைன் அரசு ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆக்கிரமிப்பின் உண்மையான பாதிப்புகளை ரஷ்யா அனுபவரீதியாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்று மட்டுமே கீவ் அரசு கூறியிருந்தது. ஆயினும் ஐந்தாவது நாளான நேற்று தொலைக்காட்சி உரை ஒன்றில் பேசிய அதிபர் ஷெலென்ஸ்கி "போர் இப்போது ஆக்கிரமிப்பாளர்களது பகுதிக்குள் இடம்மாற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
படம் :எல்லையோரங்களில் இருந்து இடம்பெயர்ந்து செல்கின்ற ரஷ்யர்கள்
ரஷ்யாவில் குர்க்ஸ் உட்பட எல்லைப் பிராந்தியங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். முன்னேறி வருகின்ற உக்ரைன் படைகளைத் தடுப்பதற்காகப் பதில் ராணுவ நடவடிக்கையை மொஸ்கோ ஆரம்பித்துள்ளது. ஆயுத தளபாடங்களுடன் படை அணிகள் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. குர்க்ஸ் பகுதியில் இருந்து இதுவரை சுமார் 76 ஆயிரம் சிவிலியன்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.
நன்றி பிபிசி வரைபடம் ——
இரண்டரை ஆண்டுகள் நீடிக்கின்ற போரில் இரண்டு தரப்புகளிலும் பெரும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற பின்னணியில் உக்ரைன் தனது பெரும் எண்ணிக்கையான வீரர்களுடன் இவ்வாறு ஒரு புதிய தாக்குதலை ரஷ்யா மீது தொடுத்திருப்பது எதற்காக என்ற கேள்வி அவதானிகளை
ஆச்சரியப்படவைத்துள்ளது.
இரண்டரை ஆண்டுகால யுத்தத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற போதிலும் எந்த வேளையிலும் எதிரி மீது ஒரு புதிய போர் முனையைத் திறக்கக்கூடிய வலுவான நிலையிலேயே உக்ரைன்
படைகள் இன்னமும் உள்ளன -
அதேசமயம், ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டிருக்கின்ற வல்லரசாகிய ரஷ்யாவின் எல்லைகளில் பாதுகாப்பு மிகப் பலவீனமான நிலையிலேயே காணப்படுகிறது -
-எல்லைதாண்டிய தனது இராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைன் தரப்பு
சொல்லுகின்ற செய்தி இதுவாக இருக்கலாம் என்று சில போரியலாளர்கள் கூறுகின்றனர்.
மொஸ்கோ உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அதன் மீதான போராக இதுவரை பிரகடனம் செய்யவில்லை. எல்லையில் உக்ரைன் படைகள் ஆரம்பித்துள்ள தற்போதைய
தாக்குதல்கள் உக்ரைன் மீதான போர்ப் பிரகடனமத்தைச் செய்ய வேண்டிய உள்நாட்டு அழுத்தத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தலாம். தற்போதைய நிலைவரத்தை அதிபர் புடின் தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டுள்ளார் என்று மொஸ்கோவில் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா இதுவரை ஆக்கிரமித்த தனது பெரும் நிலப்பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதில் குறிப்பிடக் கூடிய பெரிய வெற்றி எதனையும் உக்ரைன் படைகள் ஈட்டவில்லை. அதற்குள் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்து அதன் நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க எத்தனிக்கின்ற இந்தப் புதிய முயற்சியை "ஆபத்தான ஒரு விளையாட்டு" என்று வேறு சில ராணுவ நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
11-08-2024
Commentaires