top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பிரெஞ்சுக் கொடியை அவமதித்துக் கருத்து: துனீசிய நாட்டு மதகுருவின் வதிவிட உரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார்!!

பிரசங்கங்களில் வன்முறை தீவிரவாதம் எனக் குற்றம்!


பாரிஸ், பெப்ரவரி, 24


பிரான்ஸில் சுமார் நாற்பது ஆண்டுகள் வசித்துவந்த துனீசிய நாட்டவரான இஸ்லாமிய மத குரு ஒருவர் அவரது

வதிவிட உரிமை பறிக்கப்பட்டபின்

கைதுசெய்யப்பட்டுச் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.


பிற்போக்கான, சகிப்புத்தன்மையற்ற மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துக்களைத் தனது சமயப் பிரசங்கங்கள் ஊடாகப் பரப்பினார் என்று அவர் மீது குற்றம்

சுமத்தப்பட்டுள்ளது.


மஹ்ஜூப் மஹ்ஜூபி (Mahjoub Mahjoubi) என்ற 52 வயதான இஸ்லாமிய மதகுருவே கடந்த வியாழனன்று கைது செய்யப்பட்டுப் பாரிஸில் இருந்து விமானத்தில் துனீசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். நாட்டின் தென்பகுதியில் உள்ள Bagnols-sur-Ceze என்ற நகரில் 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து வசித்துவருகின்ற அவருக்குத்

திருமணமாகி ஐந்து பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் பிரான்ஸின் குடியுரிமை பெற்றிருந்த போதிலும் அவர் வதிவிட உரிமையுடன் மட்டுமே நீண்ட காலம் இங்கு வசித்து வந்துள்ளார். அவரது வதிவிட உரிமையை உள்துறை அமைச்சர் ரத்துச் செய்துள்ளார்.


கடைசியாக மதகுரு வெளியிட்டிருந்த வீடியோப் பிரசங்கம் ஒன்றில் பிரான்ஸின் மூவர்ணத் தேசியக் கொடியை "மூவர்ணம்"(tricolor) என்று மட்டும் குறிப்பிட்டு அதனைச் "சாத்தான்" என்று கூறியும்

அல்லாஹ்வுடன் ஒப்பிட்டால் அதற்கு "எந்தப் பெறுமதியும் கிடையாது" எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அதுவே அரச அதிகாரமட்டத்தில் கடும் சீற்றத்தை உண்டாக்கியது.


பிரான்ஸின் பெறுமானங்களுக்கும் மேற்குலகிற்கும், பெண்கள் மற்றும் யூத இனத்தவர்களுக்கும் எதிரான பல வெறுப்புணர்வுக் கருத்துக்களைத் தனது மதப் பிரசங்கங்களினூடாகப் பரப்பி வந்தார் என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதனை "நியாயமற்றது" என்று மறுத்துள்ள மதகுரு மீண்டும் பிரான்ஸ் மண்ணுக்குத் திரும்பி வந்து வசிப்பதற்கான சட்ட ரீதியான எல்லா முயற்சிகளையும் எடுக்கப்போவதாக

துனிசியா சென்றடைந்த பின்னர் தெரிவித்திருக்கிறார்.


பிரான்ஸில் அண்மையில் பலத்த அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேறிய புதிய குடிவரவுச் சட்டமே

இஸ்லாமிய மதகுருவின் நாடுகடத்தல் மிக விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவியுள்ளது என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

24-02-2024




0 comments

留言


You can support my work

bottom of page