top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பிரெஞ்சு வீராங்கனை ட்ரையத்லோன் போட்டியில் தங்கம் வென்று சாதனை

1,500 மீற்றர்கள் தூரம்

செய்ன் நதியில் நீச்சல்

40 கி.மீ. சைக்கிள் ஓட்டம்


பாரிஸ், ஜூலை 31


ஒலிம்பிக் போட்டிகளில் தீவிர எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ட்ரையத்லோன்(Triathlon) எனப்படுகின்ற மூன்று வெவ்வேறு ஓட்டங்களை உள்ளடக்கிய முப்போட்டிகள் பாரிஸில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றிருக்கின்றன. பெண்களுக்கான ட்ரையத்லோன் போட்டியில் பிரான்ஸின் வீராங்கனை Cassandre Beaugrand பலத்த ஆரவாரங்கள், உற்சாக கரகோஷங்களுக்கு மத்தியில் முதலிடத்துக்கு வந்து தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.


போட்டிகள் தொடங்கிய பிறகு பிரான்ஸுக்குக் கிடைக்கின்ற ஆறாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மொத்தமாக 18 பதக்கங்களை பிரெஞ்சு வீரர்கள், வீராங்கனைகள் நேற்று வரை வென்றுள்ளனர்.


ட்ரையத்லோன் சம்பியனுக்கான பதக்கம் பாரிஸ் இன்வலிட்டில் அமைந்துள்ள தங்கக் கோபுரக் கலசத்தின் கீழ் வைத்து (golden dome of Les Invalides) அணிவிக்கப்பட்டது.


மழையை அடுத்து இன்று காலை செய்ன் நதியில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் நீரின் தரத்தை உறுதிசெய்ததை அடுத்து ட்ரையத்லோன் போட்டிகளை உடனடியாக நடத்துவது என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி பெண்களுக்கான போட்டி தொடங்கியது.


செய்ன் நதியில் ஆரம்பித்த ஆயிரத்து 500 மீற்றர்கள் நீச்சல் போட்டியில் ஆறாவதாக வந்த Beaugrand பின்னர் நாற்பது கிலோ மீற்றர்கள் தூர சைக்கிள் ஓட்டத்தையும் நிறைவுசெய்து ஆறு வினாடிகள் இடைவெளியில் இறுதிக் கோட்டை ஓடித் தாண்டினார்.


பாரிஸின் புற நகரைச் சேர்ந்தவரான 27 வயதான Cassandre Beaugrand தனக்குக் கிடைத்த வெற்றியைத் தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் மற்றும் துவண்டுபோயிருந்த சமயங்களில் ஆதரவளித்துத் தென்பூட்டிய அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

பெண்கள் பிரிவில் சுவிற்சர்லாந்தின் Julie Perron வெள்ளிப் பதக்கத்தையும் இங்கிலாந்தின் Beth Potter வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பெண்களுக்கான போட்டிகள் முடிந்த கையோடு ட்ரையத்லோன் ஆண்கள் போடட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் பிரான்ஸுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.


செய்ன் நதியில் ட்ரையத்லோன் போட்டிகளை நடத்தி முடித்தமை பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களுக்குப்பெருத்த

நிம்மதியைத் தந்துள்ளது. நீரின் தரம் காரணமாகப் போட்டிகளை நதியில் நடத்த முடியுமா என்ற குழப்பமான நிலை கடைசி நிமிடம் வரை நீடித்தது. நீரின் மாசு காரணமாகப் போட்டி ஒத்திகைகளை நடத்துவது அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதிப் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது.


இன்று இதனை எழுதும் வரை பதக்கப் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடுகளது விவரம் வருமாறு :

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-07-2024



0 comments

Commentaires


You can support my work

bottom of page