top of page
Post: Blog2_Post

பிரிட்டிஷ் தேர்தல் 1997 க்குப் பின்னர் தொழில் கட்சிக்கு அமோக வெற்றி?

பிரதமராவாரா ஸ்ராமெர்?

மன்னரைச் சந்தித்த பின்

நாளை பதவியேற்கலாம்?


பாரிஸ், ஜூலை, 4


பிரான்ஸைப் போலவே இங்கிலாந்திலும் தேர்தல் பரபரப்பு,ஆட்சிமாற்றம் என்று அரசியல் நிலைவரம் சூடுபிடிக்கிறது.


பழைமைவாதக் கட்சியின் பிரதமர் ரிஷி சுனாக் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா அல்லது எதிர்க்கட்சியாகிய தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்ராமெர் புதிய பிரதமராகுவாரா என்பதை பிரிட்டிஷ் மக்கள் தீர்மானிக்கவுள்ளனர்.



இங்கிலாந்து (England) ஸ்கொட்லாந்து (Scotland) வேல்ஸ் (Wales) மற்றும் வட அயர்லாந்து (Northern Ireland) ஆகியன அடங்கலாக ஐக்கிய ராஜ்ஜியத்தில்

வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை

நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாகிய மைய இடதுசாரித் தொழில் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. அதன் தலைவர் 61 வயதான கெய்ர் ஸ்ராமெர் (Keir Starmer) அடுத்த பிரதமராகப் பதவிக்கு வருவார் எனத் தெரிகிறது.

படம் :வாக்களிப்பு நிலையம் அருகே தொழில் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்ராமெர்..

 

கடந்த 2019 இல் பொறிஸ் ஜோன்சன் பெரும்பான்மை பெற்றுப் பிரதமராக வந்த பின்னர் ஆளும் வலதுசாரிக் கட்சி (Tories) தேசிய அளவிலான பொதுத் தேர்தல் ஒன்றைச் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். ஜோன்சனைத் தொடர்ந்து அவருக்குப் பின்னால் வந்த பிரதமர் ரிஷி சுனாக் உரிய காலத்துக்கு ஆறு மாதங்கள் முன்பாகவே கடந்த மேயில் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார்.


கடந்த சுமார் 15 வருடகால குழப்பமான ஆட்சிக்காக ஆளும் பழமைவாதிகளை

மக்கள் தண்டிக்கப்போகின்ற தேர்தல் இது என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆட்சியை பிரிட்டிஷ் மக்கள் தூக்கிக் கடாசவுள்ளனர் என்கின்றனர் அவதானிகள்.

படம் : தனது துணைவியாருடன் வாக்களிக்கச் சென்றார் பிரதமர் ரிஷி சுனாக்...

 

நாடெங்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிப்பு மையங்களில் வாக்குப் பதிவு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. பாடசாலைகள், தேவாலய மண்டபங்கள், சன சமூக நிலையங்கள் உட்பட அருந்தகங்கள் போன்றனவும் வாக்களிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றிக் கப்பல்களிலும் வாக்களிக்க வசதிசெய்ப்பட்டுள்ளது.


நாடெங்கும் 650 தொகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். ஒரு கட்சி அல்லது கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெறுவதற்குக் குறைந்தது 326 ஆசனங்களை வென்றிருக்க வேண்டும். உத்தேச பெறுபேகள் இன்றிரவு லண்டன் நேரப்படி பத்து மணிக்குப் பின்னரே வெளியாகத் தொடங்கும்.


தொழில் கட்சி கடைசியாக 1997 இல் ரொனி பிளேயர் தலைமையில் 418 ஆசனங்களை வென்றெடுத்த தேர்தல் சாதனைக்குப் பின்னர் இந்தமுறை அதையும் தாண்டி 430 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஆளும் பழமைவாதக் கட்சி 127 வரையான ஆசனங்களுடன் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

04-07-2024





0 comments

תגובות


You can support my work

bottom of page