திருப்பி அனுப்பும் மையங்கள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
லக்ஸம்பேர்கில் கூடி விவாதம்
பாரிஸ், ஒக்ரோபர் 12
ஐரோப்பாக் கண்டம் எங்கும் குடிவரவு - புகலிட விவகாரம் சூடு பிடித்து மேலெழுந்து வரும் நிலையில் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட பொதுவான "குடிவரவு - புகலிட ஒப்பந்தத்தை " (migration and asylum pact) இயன்றளவு விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஒப்பந்தம் 2026 தொடக்கமே நடைமுறைக்கு வரவிருக்கிறது என்ற போதிலும் அதனை விரைந்து அமுல்படுத்த சில நாடுகள் அவசரப்படுகின்றன.
ஒன்றியத்தின் 27 நாடுகளினதும் அரசுத் தலைவர்கள் எதிர்வரும் 17,18 ஆம் திகதிகளில் இந்த விடயம் தொடர்பாக இணக்கம் ஒன்றை எட்டுவதற்கான மாநாட்டில்
ஒன்றுகூடவுள்ளனர். அதற்கு முன்பாக 27 நாடுகளினதும் உள்துறை அமைச்சர்கள் கடந்த 10 ஆம் திகதி லக்ஸம்பேர்கில் கூடி இதனை விவாதித்துள்ளனர். பிரான்ஸின் பழமைவாத வலதுசாரி உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோவும் அதில் பங்குகொண்டார்.
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக்கு வெளியே அல்லது எல்லையில் தடுத்து வைக்கின்ற"return hubs" எனப்படும் சர்ச்சைக்குரிய "திருப்பும் மையங்கள்" தொடர்பாகவும்
அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவுக்கு வெளியே முகாம் நிறுவுகின்ற இந்த நடைமுறையை ஆதரிக்கும் விதமாகப் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் அங்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
"எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஆரம்பத்திலேயே நிராகரித்துவிடக் கூடாது" என்று கூறிய அவர், குடிவரவின் அதிர்ச்சிகளிலிருந்து தங்களைப் பாதுகாக்க விரும்பும் நாட்டு மக்களின் விருப்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து உறுப்பு நாடுகளுடனும் நாங்கள் அதிகம் ஒன்றிணைந்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
குடியேறிகளுக்கு இவ்வாறு வெளிநாட்டில் முகாம் அமைப்பதை புதிய உள்துறை அமைச்சர் ஆதரித்தாலும் பிரான்ஸின் அரசமைப்பு விதிகளை மீறி அதனைச் செய்வது சாத்தியமற்றதாகும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
புகலிடம் கோரி வருபவர்களை நாட்டின் எல்லைக்கு வெளியே மூன்றாவது நாடு ஒன்றில் நிறுவப்படுகின்ற தடுப்பு முகாம்களில் தங்கவைத்து அவர்களது விண்ணப்பங்களைப் பரிசோதிக்கின்ற ஏற்பாடுகளை இத்தாலி, ஹங்கேரி போன்ற நாடுகள் தொடக்கியுள்ளன. இங்கிலாந்துக்கு வருகின்ற சட்டவிரோத குடியேறிகளுக்காக றுவாண்டா நாட்டில் இதுபோன்ற நிலையங்களை நிறுவி ஆரம்பித்த திட்டம் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
ஆயினும் இத்தாலி, ஹங்கேரி போன்ற ஓரிரு நாடுகள் தடுப்பு முகாம்களை அமைத்தாலும் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் இதற்கு ஆதரவான பொதுவான தீர்மானம் ஒன்று வருவதற்குத் தற்போதைய நிலைமையில் அறவே வாய்ப்பில்லை
என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும் குடியேறிகளது படையெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஷெங்கன் விதிகளை மீறி இந்த நாடுகள் தத்தமது எல்லைகளை இறுக்கி மூடிவைக்க விரும்புகின்றன.
கடந்த செப்ரெம்பர் நடுப்பகுதியில் ஜேர்மனி தனது எல்லைகளில் எல்லைப் பரிசோதனைகளை மீள அறிமுகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வாறான சோதனைகளை ஆரம்பிப்பதற்கு வேறு சில ஐரோப்பிய நாடுகளும் முனைப்புக்காட்டி வருகின்றன.
ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகளது ஆதரவு அலையும் அதிகாரமும் பெருகி வருவதால் குடியேறிகள் விவகாரம் நாடுகளது உள்நாட்டு அரசியலில் சூடான விடயமாக மாறி இருக்கின்றது.
⚫தொடர்புடைய பதிவுகள் :https://www.thasnews.com/post/வ-ஸ-வழங-கல-க-க-ற-ய-ங-கள-த-ர-ப-ப-அன-ப-ப-வத-த-வ-ரப-பட-த-த-ங-கள
தாஸ்நியூஸ் - பாரிஸ்
12-10-2024
Comments