top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பெரும் தாக்குதலை தடுக்க முடியாமற் போனது ஏன்?கைதானவர்கள் தொடர்பில் குழப்பம்

உயிரிழப்பு 133 ஆக உயர்வு

தேசிய துக்கதினம்

புடின் அறிவித்தார்


பாரிஸ், மார்ச் 24


போரில் ஈடுபட்டிருக்கின்ற ஒரு நாட்டின் உளவு சேவைகள் எவ்வாறு இப்படி ஒரு பெரும் தாக்குதலைக் கோட்டை விட்டன என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது. புடின் வெளியே காட்டுகின்ற தோற்றத்தை விடப் பலவீனமாக உள்ளாரா?


-மொஸ்கோ தாக்குதல் குறித்து ஆய்வுகளை முன்வைக்கின்ற பாதுகாப்பு நிபுணர்கள் இவ்வாறு

ஒரு வினாக்குறியை எழுப்பிச் செல்கின்றனர்.


மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடம் ஒன்றில் 48 மணி நேரத்துக்குள் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற எச்சரிக்கைத் தகவலைக் கடந்த மார்ச் 7 ஆம் திகதி அமெரிக்க அதிகாரிகள் மொஸ்கோவுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.


அதேசமயம் உக்ரைன் ஆதரவு பெற்ற குழுக்கள் ரஷ்யாவுக்குள் புதிதாகத் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றன என்று ரஷ்ய உளவு சேவைகள் தேர்தல் காலத்தில் இருந்தே எச்சரித்து வந்தன.


இவ்வாறான பின்னணியில் -


கிரெம்ளின் மாளிகையில் இருந்து சுமார் 12 மைல்கள் தொலைவில்

சுமார் ஆறாயிரம் பேர் கலந்துகொண்ட ரஷ்யாவின் பிரபல ரொக் குழுவின்

இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்ற

மூடிய அரங்குக்குப் பொலீஸ் பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை. உள்ளே ஆயுதபாணிகளது கொலைக் களேபரம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் கூட பாதுகாப்புப் படைகள் உடனடியாக அங்கு தலையிட்டுத் தடுக்க முடியாமற் போயிருக்கிறது.


தாக்குதலாளிகளுக்கு நீண்ட நேர அவகாசம் கிடைத்திருப்பதும் அவர்கள் பின்னர் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிச் செல்ல முடிந்துள்ளதும் பாதுகாப்பில் காணப்பட்ட ஓட்டைகளா என்ற கேள்வியையும் பல்வேறு ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

படம் :மொஸ்கோ கிரெம்ளின் மாளிகையின் உச்சியில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

 

அரங்கின் இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு

வருவதை அடுத்து உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக உரையாற்றிய அதிபர் புடின் இன்று ஞாயிற்றுக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்திருக்கிறார்.


"வெளிநாட்டு" த்தாக்குதலாளிகள் நால்வர் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்ட அவர், தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கத்தின் துணைக் குழு ஒன்று உரிமை கோரி இருப்பது பற்றிக் கருத்து எதனையும் வெளியிடாமல் தவிர்த்து விட்டார்.


ஆயுததாரிகள் நால்வரும் உக்ரைன் நோக்கிச் சென்று கொண்டிருந்த வழியிலேயே பிடிக்கப்பட்டனர் என்றும்

அவர்கள் பாதுகாப்பாக உக்ரைனுக்குள் நுழைவதற்கான"ஒரு வழி" எல்லையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்ட புடின், ஐஎஸ் இயக்கத்தின் உரிமை கோரல் பற்றி வாயே திறக்காமல் இந்தத் தாக்குதலோடு உக்ரைனைத் தொடர்புபடுத்தும் விதமாக மட்டும் பேசியிருக்கிறார்.


உக்ரைன் - பெலாரஸ் நாடுகளை அண்டிய எல்லையில் ஒரு கிராமப் பகுதியில் வைத்தே தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை மொஸ்கோ அதிகாரிகள் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

படம் :தாக்குதலாளிகள் கார் ஒன்றில் காணப்படுகின்ற காட்சி. ரஷ்யப் பாதுகாப்பு சேவைகளால் வெளியிடப்பட்டது.

 

ரஷ்யப் பாதுகாப்பு சேவைகளும் தாக்குதலாளிகளுக்கு உக்ரைனுக்குள் "தொடர்புகள்" இருந்தன என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

ஆயுததாரிகள் நால்வரும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய தஜிகிஸ்தானைச் (Tajikistan) சேர்ந்தவர்கள் என்ற தகவலை அவர்களது கடவுச் சீட்டுகளின் ஆதாரத்துடன் ரஷ்ய செய்தி ஊடகங்கள் சில வெளியிட்டுள்ளன.


அதேசமயம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு மத்திய ஆசியாவில் இயங்கி வருகின்ற உப குழுவாகிய "ஐஎஸ் - கே" ( IS-Khorassan)

இந்தத் தாக்குதலுக்கு உரிமைகோரி இரண்டாவது வீடியோச் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.


அரங்கின் உள்ளே "அல்லாஹூ அக்பர்" என்ற கோஷத்துடன் ஒருவரது தலை துண்டிக்கப்படும் காட்சியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டுத் தங்களது வீரர்கள் நால்வரும் பாதுகாப்பாகத் தளம் திரும்பி விட்டனர் என்றும் அந்த ஜிகாத் குழு அறிவித்துள்ளது. பொதுவாக ஐஎஸ் தீவிரவாதிகளது பெரும் தாக்குதல்களின் போது அதன் தாக்குதலாளிகள் எதிரியிடம் உயிருடன் பிடிபடுவது அரிது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சில அவதானிகள், மொஸ்கோ தாக்குதல் பல்வெறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது என்று கூறியிருக்கின்றனர்.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

24-03-2024





0 comments

Comments


You can support my work

bottom of page