தவிர்க்குமாறு ரசிகர்களை
எச்சரித்தது இஸ்ரேல் அரசு
பாரிஸில் பலத்த பாதுகாப்பு
படம் :பாரிஸ் புறநகரில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் அமைந்துள்ள Stade de France தேசிய உதைபந்தாட்ட அரங்கின் ஒரு தோற்றம்..
பாரிஸ், நவம்பர் 13
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து லீக் போட்டிகளில் பிரான்ஸ் - இஸ்ரேல் அணிகள் பங்குபற்றவுள்ள ஆட்டம் வியாழக்கிழமை மாலை பாரிஸில் நடைபெறவிருக்கிறது. அந்தப் போட்டியின்போது பெருமைக்குரிய பிரசன்னமாகக் குடியரசுத் தலைவர் மக்ரோன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ஸ்ரடாமில் கால்பந்துப் போட்டிகளை அடுத்து அங்கு நிகழ்ந்த சகிக்க முடியாத யூத எதிர்ப்புவாதச் சம்பவங்களை அடுத்து ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நோக்குடனேயே அரசுத் தலைவர் மக்ரோன் பாரிஸ் Stade de France உதைபந்தாட்ட அரங்கிற்கு வருகை தந்து போட்டியைப் பார்வையிடவுள்ளார் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
கடந்த வாரம் நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றின் போது அங்கு யூத எதிர்ப்பு வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. இஸ்ரேலிய அணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. ஐந்துபேர் வரை காயமடைய நேரிட்டது. அதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பாரிஸில் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தைப் பார்வையிடச் செல்ல வேண்டாம் என்று
இஸ்ரேல் அரசு அந்நாட்டு ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலைமையில் Stade de France அரங்கத்தில் நடைபெறவிருக்கின்ற ஆட்டம் பாதுகாப்புத் தொடர்பில் பெரும் சோதனைக் களமாக மாறியிருக்கிறது.
அங்கு வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்காக நாலாயிரம் பொலீஸார் மற்றும் ஜொந்தாம் வீரர்கள் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். அவர்களில் 2,500 வீரர்கள் அரங்கத்தைச் சூழவும் 1,500 பேர் பாரிஸ் நகரம் மற்றும் போக்குவரத்து சேவைகளிலும் காவல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். அவசியத்தைப் பொறுத்து அவர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்று பாரிஸ் பொலீஸ் தலைமை ஆணையர் Laurent Nunez தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பாவில் அதிகளவு யூதர்கள் வசிக்கின்ற நாடு பிரான்ஸ் ஆகும்.
காஸா மீதான போர் ஆரம்பித்ததில் இருந்து யூத எதிர்ப்புவாதச் சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. .
இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக ஆரம்பித்த போரை இப்போது லெபனானுக்கும் விஸ்தரித்துள்ளது.
போரில் சிவிலியன்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள் குறித்தும் லெபனானில் ஐ. நா. படை வீரர்கள் தாக்கப்பட்டது பற்றியும் அதிபர் மக்ரோன் வெளியிட்ட கருத்துக்கள் இஸ்ரேலுடனான பாரிஸின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கிழக்கு ஜெருசலேமில் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நிலையம் ஒன்றுக்குள் வைத்துப் பிரெஞ்சு ஜொந்தாம் வீரர்கள் இருவரைச் சிவில் உடையில் இஸ்ரேல் கைதுசெய்திருந்தநு . இந்தச் சம்பவம் இருநாடுகளுடையிலான ராஜீக உறவை மேலும் பதற்ற நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
13-11-2024
コメント