top of page
Post: Blog2_Post

போரில் பிரான்ஸின் நேரடித் தலையீடுகள் அதிகரிக்கின்றன! ரஷ்யா எச்சரிக்கை!!

உக்ரைனுக்கு உதவுவதில்

"வரையறை" ஏதும் இல்லை

கட்சித் தலைவர்களுக்கு

அதிபர் மக்ரோன் விளக்கம்


பாரிஸ், மார்ச், 8


அதிபர் மக்ரோன் உக்ரைன் போரில் "பிரான்ஸின் நேரடித் தலையீடுகளை அதிகரிக்கச்செய்து வருகிறார் " என்று மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது.


"மக்ரோன் நமது நாட்டுக்கு ஒரு மூலோபாயத் தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அத்துடன் போரில் பிரான்ஸின் நேரடி ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்து வருகிறார் "-என்று

கிரெம்ளின் மாளிகையின் பேச்சாளர்

டிமித்ரி பெஸ்கோ (Dmitri Peskov) ரெலிகிராம் சனலின் செய்தியாளருக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியிருக்கிறார்.


உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளது தரைப் படைகளை அனுப்பும் தெரிவை மறுக்க முடியாது என்று அதிபர் மக்ரோன் அண்மையில் வெளியிட்டிருந்த பரபரப்பான கருத்துக்கு எதிராக மொஸ்கோவில்

இருந்து எச்சரிக்கைத் தொனியிலான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.


அதிபர் புடின் சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு ஆற்றிய ஒரு உரையில், ஐரோப்பிய நாடுகளது தரைப்படைத் தலையீடு நிஜமான அணுவாயுதப் போர் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தலாம் என்று எச்சரித்திருந்தார்.


உக்ரைனுக்குத் தரைப் படைகளை அனுப்பும் சாத்தியம் தொடர்பான மக்ரோனின் கருத்தை அமெரிக்கா உட்படஅவரது அணியில் இடம்பெறும் முக்கிய நாடுகள் நிராகரித்திருந்தமை

குறிப்பிடத் தக்கது.


இதேவேளை -


மக்ரோனின் கருத்து ரஷ்யாவுடன் நேரடி மோதலைத் தூண்டும் விதமானது என்று பிரான்ஸின் முக்கிய எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனமும் கவலையும் வெளியானது. அதனால் எழுந்த அரசியல் சலசலப்புகளை அடுத்து அவர் நேற்றையதினம் சகல அரசியல் கட்சிகளினதும் தலைவர்களை அழைத்து உக்ரைன் தொடர்பான தனது அரசின் கொள்கையை விளக்கியிருக்கின்றார்.


உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்குகின்ற உதவிகளுக்கு எந்த "வரையறையும்" இருக்காது என்று அவர் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி

இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக நீடிக்கின்ற போரில் எந்தவிதமான தெரிவுகளையும் பிரான்ஸ் நிராகரிக்க மாட்டாது என்றும் அவர் தனது தளராத

பிடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள் :



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-03-2024

0 comments

Comments


You can support my work

bottom of page