பயிற்சியின் போது
நேர்ந்த அனர்த்தம்
பாரிஸ், ஓகஸ்ட் 15
பிரெஞ்சு இராணுவத்தின் ராஃபேல் (Rafale) போர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்ட விபத்தில் காணாமற் போயிருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
அரசுத் தலைவர் மக்ரோன் நேற்றிரவு இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.
நாட்டின் வடகிழக்கே Meurthe-et-Moselle
பகுதியில் நேற்றுப் புதன்கிழமை நண்பகல் வேளை இந்த விமான விபத்து நேர்ந்துள்ளது. பயிற்சிக்குப் பின்னர் ஜேர்மனியில் இருந்து திரும்பிய போர் விமானங்களே ஒன்றுடன் ஒன்று மோதுண்டன எனக் கூறப்படுகிறது. Meurthe-et-Moselle மற்றும் Vosges மாவட்டங்களின் எல்லையில் விமானப்படையின் Nancy-Ochey 133 தளத்துக்கு (133 air base) அருகிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்தது.
படம் :தேடுதல் பணியில் ஈடுபடும் ஹெலிக்கொப்ரர்...
விமானிகளில் ஒருவர் அனர்த்தங்களின் போது தப்புகின்ற தற்காப்பு முறை மூலம் வெளியே வீசப்பட்டு(eject) உயிர்பிழைத்துள்ளார். சம்பவம் நடந்த முப்பது நிமிடங்களில் மீட்புப் பணியாளர்கள் காட்டுப் பகுதியில் இருந்து அவரை மீட்டனர். அடுத்த விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சியாளராகிய இரண்டு விமானிகளும் விபத்தை அடுத்துக் காணாமற்போயிருந்தனர்.
ஹெலிகள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற தகவலை அதிபர் மக்ரோன் தனது எக்ஸ் சமூக வலை ஊடகத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
விமானப்படைக் கப்டன் Sébastien Mabire லெப்டினன்ட் Matthis Lauren ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரதும் குடும்பத்தினர் மற்றும் சக வீரர்களின் துயரத்தில் முழு நாடும் பங்குகொள்கிறது என்று மக்ரோன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சியின் போது மிக நெருக்கமாகப் பறக்கின்ற போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின்ற வாய்ப்புக்கள் அதிகம் என்ற போதிலும் நேற்றைய அனர்த்தத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-08-2024
Comentarios