திங்கட்கிழமைக்கு பின்னர்
அடுத்த வாரமே திறக்கப்படும்
பாரிஸ், ஏப்ரல் 20
பாரிஸின் மேற்குப் புறத்தில் இருந்து செல்லும் ஏ13 நெடுஞ்சாலையில் வீதியின் நடுவே ஏற்பட்ட வெடிப்புகளை அடுத்துப் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பாரிஸ் சென் குளூட் (Saint-Cloud) - வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine)ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதிப் பாகத்திலேயே தரை நகர்வு காரணமாக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால்
போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. பாரிஸில் இருந்து இந்த வழியாக வெளியேறுவோரும் உள்ளே வருவோரும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி விடுமுறையை முடித்துக் கொண்டு
பாரிஸ் திரும்பும் வாகனங்கள் பெரும் நெரிசலில் சிக்குண்டுள்ளன.
திங்கட்கிழமையும் வீதி மூடப்படும். அது மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் அன்று பின்னேரம் அறிவிக்கப்படும் என்று Hauts-de-Seine பொலீஸ் நிர்வாகப் பிரிவின் தலைமையகம் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த நிலைமை ஒரு தரை அசைவினால் ஏற்பட்ட விளைவாகும், அதற்கான காரணங்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலையின் கீழே நான்கு மீற்றர் ஆழத்தில் அமைந்துள்ள கழிவுநீர் செல்லும் கட்டமைப்பில் ஏற்பட்ட விரிசல்கள் வீதியில் சுமார் 80 சென்ரிமீற்றர்கள் வரை நீளமான வெடிப்புகளை ஏற்படுத்தியது,”-என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
20-04-2024
コメント