போதைவஸ்து அடிமையான
உரிமையாளரது மகன் கைது
பாரிஸ், நவம்பர் 16
பாரிஸ் நகருக்கு அருகே Issy-les-Moulineaux என்ற பகுதியில் பீஸா உணவகம் ஒன்றினுள் நேற்று சனிக்கிழமை பகல் பொழுதில் நடந்த பணயக்கைதிகள் நாடகம் அந்தப் பகுதியில் பல மணி நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மதியம் ஒரு மணியளவில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் எவரும் இல்லாத சமயத்தில் திடீரெனக்
கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர், உள்ளே பணியாளர்கள் நால்வரை மிரட்டியுள்ளார். கதவை மூடி உள்ளே அவர்களைத் தடுத்து வைத்துக் கொண்டு தன்னை நெருங்கினால் அவர்களைக் கொன்று தானும் உயிர் மாய்த்துக் கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான பொலீஸார் பொலீஸ் வாகனங்களுடன் உணவகத்தைச் சுற்றிவளைத்தனர். பணயக் கைதிகளை மீட்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற BRI (research and intervention brigade) என்கின்ற படை வீரர்களும் வந்து குவிந்தனர்.
restaurant "L'Olivier என்ற அந்த பீஸா உணவகத்தின் உரிமையாளரது மகனே உள்ளே பணியாளர்களைக் கத்தி முனையில் தடுத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவரோடு சுமார் மூன்று மணிநேரம் பேச்சு நடத்திய பின்னர் பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளே நுழைந்து அவரைக் கைது செய்தனர். சிக்குண்டிருந்த பணியாளர்கள் நால்வரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.
கைதான நபர் நீண்ட காலமாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மனநலப் பரிசோதனைக்காக அவர்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எதிராக விசாரணைகள் பின்னர் நடைபெறவுள்ளன.
போதைப் பொருள் பாவனை, கடத்தல் மற்றும் அவை தொடர்பான குற்றச் செயல்கள் நாட்டின் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ள நிலையில் இது போன்ற சம்பவங்கள் பிரான்ஸில் அடிக்கடி நிகழ்ந்துவருகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
17-11-2024
Comments