Porte des Lilas — Porte d'Orléans
பகுதியில் செவ்வாய் ஆரம்பம்
பாரிஸ், செப்ரெம்பர் 29
பாரிஸ் நகரின் சுற்று வளைய வீதியில்
(périphérique ) வாகன வேகத்தை மணிக்கு 50 கிலோ மீற்றர்களாகக் குறைக்கின்ற நடவடிக்கைகள் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என்று
நகர முதல்வர் ஆன் கிடல்கோ அறிவித்திருக்கிறார்.
முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வீதியின் வெவ்வேறு பகுதிகளில் கட்டம் கட்டமாக ஆரம்பமாகவுள்ள பரீட்சார்த்தப் போக்குவரத்து பின்னர் ஒக்ரோபர் 10 ஆம் திகதி முழு அளவில்
நடைமுறைக்குவரும் என்று நகரசபை தெரிவித்துள்ளது.
35 கிலோ மீற்றர்கள் நீளமான இந்த வீதியில் வேகத் தணிப்பை அறிவிக்கின்ற புதிய சமிக்ஞைக் குறியீடுகள் (nouveaux panneaux de signalisation) 160 இடங்களில் பொருத்தப்படவுள்ளன. அதற்காக இரவு நேரத்தில் வீதிகள் மூடப்படவுள்ளன.
முதற்கட்டமாக Porte des Lilas மற்றும் Porte d'Orléans முனைகளுக்கு இடைப்பட்ட வீதியில் செவ்வாய்க்கிழமை வேகம் 50 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்படும்.
தொடர்ந்து -
⚫புதன்கிழமை, 2 ஒக்ரோபர் : porte d’Orléans மற்றும் porte Dauphine இடைப்பட்ட உட் சுற்று வீதிப்(boulevard périphérique intérieur) பகுதியில் -
⚫வியாழக்கிழமை 3 ஒக்ரோபர் : porte de Bagnolet மற்றும் porte Maillot பகுதிகளுக்கு இடைப்பட்ட வெளிச் சுற்று வளைவு வீதிப் (boulevard périphérique extérieur) பகுதியிலும் -
⚫வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர் 4 :
porte Dauphine மற்றும் porte des Lilas
முனைகளுக்கு இடைப்பட்ட உட்சுற்றுவளைவு (boulevard périphérique intérieur) வீதிப் பகுதியிலும் -
⚫புதன்கிழமை 9,ஒக்ரோபர் :la porte Maillot மற்றும் la porte de Châtillon முனைகளுக்கு இடைப்பட்ட உட் சுற்றுவளைவு வீதிப்(boulevard périphérique extérieur) பகுதியிலும் -
⚫வியாழக்கிழமை, 10, ஒக்ரோபர் :la porte de Châtillon மற்றும் la porte de Bagnolet முனைகளுக்கு இடைப்பட்ட
உட்சுற்று வீதிப்(boulevard périphérique extérieur) பகுதியிலும் -
50 கிலோ மீற்றர்கள் வேகக் கட்டுப்பாடு
பரீட்சிக்கப்படவுள்ளது.
வாகனப் போக்குவரத்தை இலகுவாக்குவதற்காகப் பாரிஸ் நகரைச் சுற்றி அமைக்கப்பட்ட பெரிபெரிக்(périphérique) எனப்படுகின்ற சுற்றுவளைவு வீதியில் தற்சமயம் வாகன வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை மேலும் குறைத்து 50 கிலோமீற்றர்களாக்குகின்ற இந்தத் திட்டத்தைப் பாரிஸ் நகரசபை நீண்ட காலமாகப் பரிசீலித்த வருகிறது. அதற்குப் பல தரப்புகளில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
நகர வீதிகளில் வாகன வேகத்தைத் தீர்மானிப்பதில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நகரசபைக்கு அதிகாரம் உள்ள போதிலும் அதற்குப் பாரிஸ் பிராந்திய நிர்வாகம் மற்றும் நாட்டின் தேசிய போக்குவரத்து அமைச்சு ஆகிய தரப்புகளின் ஒப்புதல் பெறப்படவேண்டும்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
29-09-2024
Comments