கத்தோலிக்கர்கள் நேரிலும்
திரைகளிலும் கண்டுகளிப்பு
சனியன்று திறப்பு விழாவில்
ட்ரம்ப், ஷெலென்ஸ்கி உட்பட
பல தலைவர்கள் பிரசன்னம்
பாரிஸ், டிசெம்பர் 9
பாரிஸ் நொத்த-டாம் பேராலயத்தில் புனரமைப்புக்குப் பின்னர் முதலாவது திருப்பலிப் பூசை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்கிறது. தலைநகருக்கு வந்துருந்த பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மழையும் குளிருமான கால நிலைக்கு மத்தியில் திறப்பு விழாத் திருப்பலியை நேரிலும், ஆலயத்துக்கு வெளியே நிறுவப்பட்டிருந்த அகலத் திரைகளிலும் கண்டுகளித்தனர்.
பாரிஸ் பேராயர் லோரன்ட் உல்ரிக்வாஸ் (Laurent Ulricwas) தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 150 க்கும் மேற்பட்ட ஆயர்கள் பங்குபற்றினர்.
சுமார் 2ஆயிரத்து 500 பொது மக்கள் கலந்துகொண்ட இரண்டாவது திருப்பலி பின்னராக மாலையில் நடைபெற்றது.
இதேவேளை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட பேராலயத்தின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா வைபவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அமெரிக்காவில் தெரிவுசெய்யப்பட்ட அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி, இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அமெரிக்காவின் முதற்பெண் ஜில் பைடன், ஜேர்மனியின் அதிபர், அமெரிக்கக் கோடீஸ்வரரும் உலகின் பெரும் செல்வந்தருமாகிய எலன் மாஸ்க், ஆகியோரும் மேலும் சில நாடுகளின் தலைவர்களும்
அந்த வைபவத்துக்கு வருகைதந்திருந்தனர். அதிபர் மக்ரோனும் துணைவியார் பிரிஜித் மக்ரோனும் பேராலய முற்றத்தில் வைத்து அவர்களை வரவேற்றனர்.
பாரிஸ் பேராயர் லோரன்ட் உல்ரிக்வாஸ், மத அனுஷ்டானங்களுடன் பேராலயத்தின் கதவில் தட்டி அதனைத் திறந்து வைத்தார். அப்போது ஆலய மணிகள் ஒலித்தன.
உலகின் புராதன சின்னங்களில் ஒன்றான இந்தப் பேராலயம் 2019 ஏப்ரலில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால்
முற்றாக எரிந்து சாம்பரானது தெரிந்ததே. ஐந்து ஆண்டுகள் நீடித்த மீளமைப்புப் பணிகளின் நிறைவில் தற்போது பேராலயம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அங்கு இடம்பெறும் திருப்பலி பூசைகளில் பொதுமக்கள் வழமை போன்று கலந்துகொள்ள முடியும்.
பேராலயத்தின் திறப்பு விழாவுக்காகப் பாரிஸ் வந்திருந்த டொனால்ட் ட்ரம்ப், எலிஸே மாளிகையில் அதிபர் மக்ரோனைச் சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கியும் அங்கே அவரைச் சந்தித்தார். தேர்தலில் வென்ற பிறகு ட்ரம்ப் இந்தத் திறப்பு விழா வைபவத்துக்காக ஐரோப்பாவுக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
🔵திறப்பு விழாவில் சில காட்சிகள்
தாஸ்நியூஸ் - பாரிஸ்
09-12-2024
Comments