மூன்று இடங்களில்
2025 முதல் அனுமதி
செய்ன் நதியில் நீந்திக் குளிக்க வேண்டும் என்ற பாரிஸ் நகர மக்களது நீண்ட காலக் கனவு விரைவில் நிறைவேறப்போகின்றது என்ற
தகவலை நகர மேயர் ஆன் கிடல்கோ அறிவித்திருக்கிறார்.
நகரை ஊடறுத்துச் செல்கின்ற நதியில் 2025 ஆம் ஆண்டு முதல் நீச்சலில் ஈடுபட
அனுமதி வழங்கப்படவுள்ளது. முதற் கட்டமாக நீச்சலுக்குரிய வெவ்வேறு மூன்று இடங்களை நகர சபை அறிவித்திருக்கிறது. பிறா மரி (Bras Marie) கிறெநெல் (Grenelle) பேர்ஸி (Bercy) ஆகிய மூன்று இடங்களிலேயே கட்டணம் ஏதும் இன்றி நீந்துவதற்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. (Port de Bercy, dans le XIIe arrondissement, face à la BNF ; au niveau du bras Marie, dans le IVe arrondissement en face de l’île Saint-Louis côté rive droite ; et à port de Grenelle face à l’île aux Cygnes)
கோடைகால வெப்பத்தால் அவதிப்பட்டு
வருகின்ற நகரவாசிகளுக்கு ஒரு
குளிர்மையான செய்தியாக இது வந்துள்ளது. பாரிஸ் நகரம் உலகில் மிக அதிக வெப்பத்தைச் சந்தித்துவருகின்ற நகரங்களில் முன்னணியில் உள்ளது. அதன் வெப்பநிலை 2050 ஆம் ஆண்டளவில் 50 டிகிரியாக உயரும் என்று கணிப்பிடப்படுகிறது.
வெப்பத்தைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாகவே செய்ன் நதியை நீச்சலுக்கு உகந்த நீராகச் சுத்திகரிக்கின்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு கோடையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக நதி நீர்
சுத்திகரிப்பு வேலைகள் பூர்த்தியடைய
வுள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவும்
சில விளையாட்டு நிகழ்வுகளும் செய்ன் நதி நீரில் நடைபெறவுள்ளன.
உலகின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் "காதல் நதி" என்றும் வர்ணிக்கப்படுகின்ற செய்ன் நதி, பிரான்ஸின் கிழக்கே மத்திய மாகாணத்தில் பேர்கண்டி (Burgundy) என்ற நகரில் ஆரம்பித்துத் தலைநகர் ஊடாக நகர்ந்து வடக்கே நோர்மண்டியில் (Normandy) கடலில் கலக்கிறது. 481 மைல்கள் நீளமான இந்த நதி நீரின் அசுத்தம் காரணமாக அதில் நீந்திக் குளிப்பது 1923 ஆம்
ஆண்டு முதல் உத்தியோகபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
நதி நீரைத் தூய்மையாக்கி நகர மக்கள் நீந்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற சிந்தனையை முதலில் முன்னெடுத்தவர் முன்னாள் அதிபர் யக் சிராக்.(Jacques Chirac). 1990 இல் அவர் பாரிஸ் நகரின் முதல்வராகப் பதவி வகித்த சமயத்தில் செய்ன் நதியை மூன்று வருடங்களில் தூய்மையாக்கும் திட்டம் ஒன்றை வகுத்தார். ஆனால் அது பல்வேறு சவால்கள் காரணமாக நிறைவேறவில்லை. தற்சமயம் மேயர் ஆன் கிடல்கோ அதனை நிறைவேற்றி முடிக்கும் கட்டத்தை நெருங்கியுள்ளார்.
நதியில் நீந்தவிரும்பிய நகரவாசிகளது கனவு சுமார் நூறு ஆண்டுகள் கடந்து நிறைவேறுகின்றது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
12-07-2023
Kommentare