🟠செம்மஞ்சள் எச்சரிக்கை
பாரிஸ் மே, 1
மே தினமாகிய இன்று பாரிஸ் பிராந்தியம் அடங்கலாக நாட்டின் வடக்கில் 19 மாவட்டங்களில் புயல் மழை மற்றும் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மாதக் கணக்கில் பெய்யக் கூடிய நீரின் அளவை மிகக் குறுகிய நேரத்தில் பொழிந்து தள்ளுகின்ற கன மழை பாரிஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளை இன்றிரவு பத்து மணியளவில் தாக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. Paris, Seine-Saint-Denis, Hauts-de-Seine, Val-de-Marne, Yvelines, Val-d'Oise, Essonne, Seine-et-Marne, Somme, Oise, Aisne, Marne, Aube மற்றும் Yvonne மாவட்டங்களில் இந்தத் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
வானிலை அவதான நிலையமாகிய மெத்தியோ பிரான்ஸ், இன்று காலை முதல் இல்-து-பிரான்ஸின் எட்டு மாவட்டங்களில் "செம்மஞ்சள்"
எச்சரிக்கையை (Orange alert) அறிவித்திருக்கிறது. இந்தப் பகுதியில்
மாலை ஏழு மணி முதல் வீரியம் மிக்க புயல் காற்றுடன் இடி மின்னல் மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் கொட்டலாம்.
காற்று மணிக்கு 60--முதல் 90 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசக்கூடும்.
பாரிஸில் Seine-et-Marne பகுதி இன்று முன்னிரவு வேளை குறுகிய நேரத்தில் மிகப்பலமான மழைப் பொழிவைச் சந்திக்கலாம். ஆலங்கட்டிகளும் கடுமையாகக் கொட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
01-05-2024
Comments