கடுங் காற்று, உறைபனி
வியாழனன்று எதிர்பார்ப்பு
பாரிஸ், நவம்பர், 21
பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் முப்பதுக்கு மேற்பட்ட மாவட்டங்களில்
நாளை வியாழக்கிழமை முன்கூட்டிய பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக
வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.
இல் - து-பிரான்ஸின் சகல மாவட்டங்களும் அடங்கலாக நாட்டில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதியில் - கடுங் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு, மற்றும் உறைபனியை எதிர்பார்த்து செம்மஞ்சள் எச்சரிக்கை (orange alert) விடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் பலத்த மழையை ஏற்படுத்திய Caetano என்ற புயல்காற்று வியாழக்கிழமை பிரான்ஸைக் கடந்துசெல்ல இருப்பதால் அது நாட்டின் சில பகுதிகளில் காலம் முந்திய பனிப் பொழிவை ஏற்படுத்தவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸ் நகர்ப்பகுதியில் 2முதல் 5சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. புறநகரங்களில் 7 செ. மீற்றர்கள் வரை பதிவாகக்கூடும். உறைபனி காரணமாக வீதிப் போக்குவரத்துக்கள் நெருக்கடிக்குள்ளாகலாம்.
பாரிஸ் பொலீஸ் தலைமையகம் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் பல அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறது.
செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் வருமாறு :
Côtes-d'Armor, Ille-et-Vilaine, Calvados, Eure, Manche, Orne, Mayenne, Sarthe, Eure-et-Loir, Loir-et-Cher, Loiret, Aube, Yonne, Haute-Marne, Côte d'Or, Vosges, Haute-Saône, Doubs, Territoire de Belfort, Haut-Rhin, Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise, Alpes de Haute-Provence, Hautes-Alpes, Nièvre, Cher.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
21-11-2024
Comments