ஒலிம்பிக் எதிர்ப்பு...
பலஸ்தீன ஆதரவு...
கோஷங்கள் ஒலிப்பு...!!
பாரிஸ், மே, 1
பாரிஸிலும் நாட்டின் பல நகரங்களிலும் உலகத் தொழிலாளர் நாள் பேரணிகள் நடைபெற்றிருக்கின்றன. நாடெங்கும் சுமார் இரண்டு லட்சம் பேர் இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டனர் என்று பிரதான தொழிலாளர் சங்கம் (CGT) தெரிவித்திருக்கிறது.
இந்த முறை இதற்கு முந்திய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் மிகக் குறைந்த எண்ணிக்கையான தொழிலாளர்களே வீதியில் இறங்கியுள்ளனர். ஓய்வூதியச் சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து
கடந்த ஆண்டு பெரும் தொகையில் தொழிலாளர்கள் வீதிகளில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல நகரங்களில் நடந்த இன்றைய பேரணிகளில் பலஸ்தீனக் கொடிகள் பறந்தன. காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்திருக்கிறது. அதேசமயம் பாரிஸ் நகரப் பேரணியில் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளை எதிர்க்கின்ற கோஷங்களையும் அவதானிக்க முடிந்தது.
பாரிஸ் நகரில் பிரதான பேரணி பிளாஸ்-து-லா ரிப்பப்ளிக் நினைவிடத்தில் இருந்து பிளாஸ் து லா நசியோன் வரை சென்றது.பேரணி பெரும்பாலும் அமைதியாக நிறைவுபெற்ற போதிலும் வழக்கம் போன்று பேரணிகளில் ஊடுருவி வன்முறையில் ஈடுபடுகின்ற தலைமறைவுக் கும்பல்கள் பொலீஸாருடன் ஆங்காங்கே மோதல்களில் ஈடுபட்டன.
இன்று மாலை பிரதான பேரணி முடிவடைந்த பின்னரும் வீதிகளில் பொலீஸாருக்கும் வன்முறைக் கும்பல்களுக்கும் இடையே மோதல்கள் நீடித்தன.
படம் :தொழிலாளர்கள் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்துகிறது என்று குற்றம்சுமத்தி அதனை எதிர்க்கின்ற பதாகைகள் சிலவும் பேரணியில்
எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஒன்று.
பாரிஸில் குழப்பம் விளைவித்த 45 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று பொலீஸ் தலைமையகம் தெரிவித்தது.
உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்ட சம்பவத்தில் ஏழு பொலீஸார் படுகாயமடைய நேரிட்டுள்ளது. அவர்களில் சிலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அதேசமயம் தனியாருக்குச் சொந்தமான வான் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
படம் :பாரிஸ் வாழ் தமிழர்கள் வழக்கம் போல பிரதான மேதினப் பேரணியில் இணைந்து கொண்டனர். தலைவர் பிரபாகரனின் மிகப் பெரிய உருவப் படத்துடன் தமிழீழத் தேசியக் கொடிகளும் பேரணியில் காணப்பட்டன.
பாரிஸ் பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் என்று தொழில் சங்கம் அறிவித்துள்ளது. சுமார் 18 ஆயிரம் பேரே அணி திரண்டனர் என்று பொலீஸ் தலைமையகம் மதிப்பிட்டுள்ளது.
அரசுத் தலைவர் மக்ரோன் மே தினத்தை ஒட்டித் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்ற செய்தியை
"எக்ஸ்" சமூக வலை ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
01-05-2024
Comments