top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸ் பிரதேசத்தை நெருங்குகின்றது விவசாயிகள் போர்!

A1, A6,A10-11,'A13, A15

வீதிகளில் தடைகள்


பாரிஸ், ஜனவரி 26


நாடெங்கும் தீவிரமடைந்துள்ள விவசாயிகளது போராட்டம் பாரிஸ் பிராந்தியத்தை நெருங்கி வருகிறது.


இன்று வெள்ளிக்கிழமை பாரிஸின் முக்கிய வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி மறியலில் ஈடுபடுமாறு இல்-து-பிரான்ஸ் இளம் விவசாயிகள் கழகம் (les Jeunes agriculteurs 'Île-de-France) அழைப்பு விடுத்திருக்கிறது. தங்களது கோரிக்கைகளுக்குத் திட்டவட்டமான பதில் கிட்டாதுவிடின் பாரிஸ் வீதிகளை முடக்குகின்ற இறுதிக் கட்டப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்று விவசாய அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றன.


பிராந்தியங்களைச் சேர்ந்த உழவர் சங்கங்களும் பண்ணையாளர்கள் அமைப்புகளும் பாரிஸ் பிராந்தியத்தை நோக்கிப் படையெடுக்க ஆயத்தமாகி

வருகின்றன என்று பிரான்ஸின் புலனாய்வுச் சேவைகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாரிஸ் பிராந்தியத்தின் உள்செல்லும் வெளி அகலும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்ற முஸ்தீபுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.


பாரிஸ் பிராந்தியத்துக்கு நெருக்கமான

A1,A6,A10-11, A13, A15 ஆகிய ஓட்டோறூட்டுகளில் (autoroute) இன்று வெள்ளிக்கிழமை விடிகாலை முதல் "தடை நிலைகள்("points de blocage") நிறுவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீதிப் போக்குவரத்துகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.

நீண்ட காலமாகத் தங்களது குரல்கள் செவிமடுக்கப்படாததால் ஆத்திரமடைந்துள்ள விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக நாடெங்கும் வீதி மறியல்கள், வாகனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

பொலீஸ் நிலையங்கள் முன்பாக ரயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நலனுக்கு இடையூறாகச் சில சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்ற போதிலும் கலவரம் அடக்கும் பாணியில் பொலீஸாரைக் களமிறக்குவதை அரசு தவிர்த்து வருகிறது. விவசாயிகளது கோரிக்கைகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாலேயே அரசு அடக்கி வாசித்து வருகிறது. உள்நாட்டு விவசாயிகளது நியாயமான கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் திட்டவட்டமான பதில்களை அரசு இன்னமும் வெளியிடவில்லை.


போராட்டங்கள் தலைநகர் நோக்கி நகர்கின்ற இவ்வேளையில் பிரதமர் கப்ரியேல் அட்டால் Haute-Garonne என்ற இடத்தில் இன்று விவசாயிகளை நேரில் சந்திக்கவுள்ளார்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

26-01-2024






0 comments

Comments


You can support my work

bottom of page