மாணவ சமூகம் அதிர்ச்சி
சந்தேக நபரான இளைஞர்
ஜெனீவாவில் கைதானார்!
பாரிஸ், செப்ரெம்பர் 24
பாரிஸில் 19 வயதான பல்கலைகழக மாணவியின் சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில்
பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுதியிருக்கிறது.
பாரிஸ் Dauphine பல்கலைக்கழகத்தைச் (l'université de Paris Dauphine) சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவியான பிலிப்பீன் (Philippine) என்பவரே புவா து புளோன் (le bois de Boulogne) மரத்தோப்புப் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டபின்பு தீ மூட்டி எரிக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாரிஸ் Yvelines பகுதியில் Montigny-le-Bretonneux, என்ற இடத்தில் வசிக்கின்ற பிலிப்பீன் வெள்ளிக்கிழமை இரவு முதல் காணாமல்போயிருந்தார். அவளைத் தேடும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளில் மாணவி மூச்சுத் திணறலாலேயே (asphyxiation) உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் எவ்வாறு அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு
இன்னமும் விடை கிடைக்கவில்லை.
உடலில் கீறல் மற்றும் துன்புறுத்திய அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் க.ழுத்து நெரிக்கப்பட்டமைக்கான தடயங்கள் தென்படவில்லை என்று விசாரணையாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம், மாணவியின் கொலையுடன் தொடர்புடைய 22 வயது இளைஞன் ஒருவர் கைதாகியுள்ளார். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சுவிற்சர்லாந்தில் ஜெனீவாப் பகுதியில்
பிடிபட்டிருக்கிறார். மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்துப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் புவா து புளோன் ( Bois de Boulogne) காட்டுப் பகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்பு
நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
புலன் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
பல்கலைக்கழகத்திலும் நண்பிகள் மத்தியிலும் மிகவும் விரும்பப்படுபவளாக விளங்கிவந்த பிலிப்பீன் சாரணிய இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பிறருக்கு உதவுவதற்கும் பொதுச் சேவைகளுக்கும் முன்னிற்பவள் என்று
அவளது சக மாணவிகள் கூறியுள்ளனர்.
Dauphine பல்கலைக்கழகத்தில் திங்களன்று மாணவியின் மறைவுக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடநேர மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.
பாரிஸ் நகரத்துக்குத் தூய்மையான காற்றை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியே புவா து புளோன் (le Bois de Boulogne) ஆகும். நகரின் மேற்குப் பகுதியில் 16 ஆவது நிர்வாகப் பிரிவில் அது அமைந்துள்ளது. மாணவி பிலிப்பீனின் பல்கலைக்கழகமும் அதற்கு மிக அருகிலேயே உள்ளது. Dauphine பல்கலைக்கழக மாணவிகள் இந்தக் காட்டுப் பகுதியைக் கடந்து
செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளனர். எனினும் அது ஆபத்தான பகுதி அல்ல என்று அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். அங்கு ஏற்கனவே பல இடங்களில் கண்காணிப்புக் கமெரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
24-09-2024
Comments