top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தும் வாய்ப்பைப் பெற்றார் தர்ஷன் செல்வராஜா!

ஈழத் தமிழருக்குப் பெருமை


பாரிஸ், மே 8


ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் நாடு முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பாரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் நல்வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கும் கிடைத்திருக்கிறது.


பாரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று

நாட்டின் அதிபரது வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகிக்கின்ற பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா

(Tharshan Selvarajah) என்பவரே

ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகப் பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார்.


இன்று வியாழக்கிழமை மார்செய் நகருக்கு வந்தடைகின்ற தீப்பந்தத்தை பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சல் ஓட்ட முறையில் மாறிமாறிச் சுமந்து செல்லவுள்ளனர். இந்த நீண்ட பயணத்தில் சுமார் நானூறு நகரங்கள் மற்றும் உல்லாசப்பயண மையங்கள் ஊடாகத் தீப்பந்தம் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

தங்கள் கரங்களில் ஒலிம்பிக் சுடரைச் சுமந்து ஓடுவதற்காக நகரங்கள் தோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்.


தீப்பந்தம் பாரிஸ் பிராந்தியத்துக்கு பெரும்பாலும் ஜூலை மாத முதல் வாரங்களில் வந்துசேரும். தர்ஷன் செல்வராஜா எந்த இடத்தில் வைத்து அதனை ஏந்துவார் என்ற விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.


பாரிஸ் நகரின் சிறந்த பாணைத் (la meilleure baguette de la ville de Paris) தயாரிக்கின்ற பேக்கரியாளரைத் (la boulangerie) தெரிவு செய்வதற்காகப் பாரிஸ் நகர சபையால்

ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற போட்டியில் கடந்த ஆண்டு நகரின் 20 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள "Au levain des Pyrénées" என்ற தர்ஷன் செல்வராஜாவின் வெதுப்பகம் முதல் இடத்தை வென்று சாதனை படைத்தமை தெரிந்ததே.


தர்சன் செல்வராஜா இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்தவர். இத்தாலி உணவகம் ஒன்றில் பணியாற்றியவர்.

அங்கே ஏற்பட்ட ஓர் அறிமுகம் காரணமாகத் தனது உணவகத்

தொழிலைக் கைவிட்டுச் சுயமாக வெதுப்பகம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்திப் பாண் தயாரிப்பில் இந்தச் சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-05-2024

0 comments

Comments


You can support my work

bottom of page