top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸில் நேற்றிரவு ராணுவ வீரர் மீது கத்திக் குத்து!

Gare de l'Est பகுதியில்

சம்பவத்தால் பரபரப்பு


பாரிஸ், ஜூலை 16


பாரிஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு கத்தியால் தாக்கப்பட்டுக் காயமடைந்தார். தாக்குதலாளி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.


Gare de l'Est வட்டாரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒப்பரேஷன் சொன்ரினல்

('opération Sentinelle') இராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அவருக்கு உடலின் பின் புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் உயிராபத்து இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா தனது சமூக வலைத் தளத்தில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


அந்தப் படை வீரரை அவசர முதலுதவி சேவையினர் மீட்ட போது அவர் சுயநினைவிழந்து காணப்பட்டார் என்று செய்திகள் தெரிவித்தன. தாக்குதல் நடத்திய 40 வயது மதிக்கத் தக்க நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கொலைக் குற்றத்துடன் தொடர்புடையவராக அறியப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இராணுவ வீரரைத் தாக்கிய போது அவர்"கடவுளே மேலானவர்"(Dieu est grand) எனப் பிரெஞ்சு மொழியில் கோஷமிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. "அல்லாஹூ அக்பர்" எனக் கத்தினார் என முன்னர் வெளியான தகவல்களை விசாரணையாளர்கள் மறுத்துள்ளனர்.

அவர் கொங்கோ நாட்டில் பிறந்த ஒரு கிறிஸ்தவர்.2006 இல் பிரெஞ்சுக்

குடியுரிமை பெற்றவர். 2018 இல் பாரிஸ் ரயில் நிலையம் ஒன்றில் வைத்து வாலிபர் ஒருவரைக் கொல்ல முயற்சித்த சம்பவத்துடனும் தொடர்புடையவராக அறியப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஒலிம்பிக் போட்டிகளுக்காகப் பாரிஸ் நகரம் கடும் கட்டுக்காவல் பாதுகாப்புகளின் கீழ் இருந்து வருகிறது. ஆயிரக் கணக்கான பொலீஸாரும் படையினரும் இரவுபகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

16-07-2024

0 comments

Comentarios


You can support my work

bottom of page