தவறுதலாக வெடித்ததில்
எரிகாயத்துடன் சிக்கினார்
பாரிஸ், ஜூன், 5
பாரிஸ் றுவாஸி விமான நிலையம் (Paris's Charles de Gaulle) அருகே ஹொட்டேல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யா - உக்ரைன் நாட்டுப் பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரைக் காயங்களுடன் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
அவர் உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ரஷ்ய மொழி பேசும் டொன்பாஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Roissy-en-France (Val-d'Oise) பகுதியில் 26 வயதான அந்த இளைஞன் தங்கியிருந்த ஹொட்டேல் அறையில் கடந்த திங்களன்று பிற்பகல் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் முகம் முழுவதும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய அந்த இளைஞனை அவசர முதலுதவி சேவையினர் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் தங்கியிருந்த அறையில்
சோதனை நடத்திய பொலீஸார் வெடி குண்டு தயாரிக்கத் தேவையான பொருள்களையும், துப்பாக்கி மற்றும் போலியான பயண ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வெடி குண்டு தயாரிக்கின்ற முயற்சியின் போதே அந்த இளைஞன் காயமடைந்தமை
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிகிச்சைக்குப் பின்னர் அவரைத் தடுத்து வைத்துள்ள பொலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹொட்டேலில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வழக்குகளை விசாரிக்கின்ற நீதிமன்றத்தின் வழக்கறிஞர் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் ஓரிரு மாதங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் பிரான்ஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற சமயத்தில் உதைபந்தாட்ட அரங்கு ஒன்றில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் செச்சினிய நாட்டு இளைஞர் ஒருவரைப் பொலீஸார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். அதேசமயம் ஈபிள் கோபுரம் அருகே ஐந்து சவப் பெட்டிகளை வைத்துச் சென்ற வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-06-2024
Comments