சுதந்திர நாள் இரவில்
புதிய வானவேடிக்கை
பாரிஸ், ஜூலை 15
ஈபிள் கோபுரத்துக்கு அருகே ஆயிரத்து 100 பைரோரெக்னிக் ட்ரோன்கள் (drones pyrotechniques) வரைந்த மரியனின் ஒளிரும் உருவத்தையே படத்தில் காண்கிறீர்கள்.
மரியன்(Marianne) என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்ற இந்தப் பெண் முகம் பிரெஞ்சுக் குடியரசின் அடையாளமாகவும் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்கின்ற அதன் மகுட வாக்கியத்தினது உருவமாகவும் விளங்குகின்றது.
ஆண்டு தோறும் பிரான்ஸின் சுதந்திர நாளை ஒட்டி அன்றிரவு நடைபெறுகின்ற பாரம்பரிய வான வேடிக்கைகளுக்குப் பதிலாக இந்த முறை நவீன ட்ரோன் தொழில் நுட்ப முறையிலான இந்தக் காட்சிகள் பாரிஸ் வான்பரப்பில் ஜொலித்தன.
ஜூலை 14 சுதந்திர தினத்தன்று ஈபிள் கோபுரப் பகுதியில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் வழக்கமாக நடைபெறுகின்ற பிரமாண்டமான வானவேடிக்கை நிகழ்வு நேற்றிரவு நடைபெறவில்லை.
வானவேடிக்கை நடைபெறுகின்ற Trocadéro மற்றும் Champ-de-Mars பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் காரணமாக ரசிகர்கள் அங்கு திரள அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் காண்போர் அதிசயிக்கும் விதமாகப் பாரிஸ் வான் பரப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட புதியவகை அரிய வானவேடிக்கைக் காட்சிகள் நேற்றிரவு இடம்பெற்றன. பைரோரெக்னிக் ட்ரோன்கள் மூலமாக மரியன்னையின் தோற்றம் மாத்திரமன்றி, ஒலிம்பிக் வீரர் ஒருவரது உருவம், ஒலிம்பிக் வளையங்கள் என்பனவும் வானில் காட்சிப்படுத்தப்பட்டன.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சுமார் பத்து நாட்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில் பாரிஸ் நகரம் விழாக் களையுடன் காணப்படுகின்றது.
ஒலிம்பிக் தீப்பந்தம் தலைநகரின் முக்கிய இடங்களூடாக அஞ்சல் ஓட்ட முறையில் பல நூற்றுக்கணக்கானோரது கைமாறிப் பவனி வந்துகொண்டிருக்கின்றது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-07-2024
Comments