top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பிரதமரைத் தெரிவுசெய்வதில் இடதுசாரிக் கூட்டணிக்குள் இழுபறி நீடிப்பு


சிவில் சமூகப் பிரதிநிதி

ஒருவரை நிறுத்த முடிவு?

அட்டாலின் பதவி விலகல்

அதிபர் மக்ரோன் ஏற்றார்

காபந்து அரசு அறிவிப்பு

பாரிஸ், ஜூலை 17


பிரதமர் கப்ரியேல் அட்டாலின் பதவி விலகலை அதிபர் மக்ரோன் இன்றைய தினம் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்துப் புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை அவர் நாட்டின் நாளாந்த இயக்கத்துக்கான சில பொறுப்புகளை மட்டும் கொண்ட காபந்து அரசு(caretaker government) ஒன்றுக்குத் தலைமை வகிப்பார் என எலிஸே மாளிகை அறிவித்திருக்கிறது.


காபந்து அரசு என்பது நடப்பு விடயங்கள்(current affairs) சிலவற்றை மாத்திரம் கவனிக்கின்ற பொறுப்புக் கொண்டது. அதனால் சட்டங்களைத் திருத்தவோ புதிய சட்டங்களை இயற்றவோ இயலாது. அதேசமயம் நடப்பு விடயங்களுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளைச் சீராக நடத்தி முடிப்பதை

உறுதிப்படுத்துவதும் காபந்து அரசின் பொறுப்புக்களில் உள்ளடங்கும்.


கப்ரியேல் அட்டால் தனது 35 ஆவது வயதில் பிரான்ஸின் வயதில் இளைய பிரதமராகக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். மக்ரோனின் மையவாதக் கட்சியைச் சேர்ந்த இளம் அரசியல் பிரமுகரான அவர் நாட்டு மக்கள் மத்தியில் மக்ரோனை விடவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிவந்தார்.


காபந்து அரசின் காலம் மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என்பதால் தேர்தலில் வென்ற அணிகள் புதிய கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலும் அவகாசம் கிடைத்திருக்கிறது. ஆயினும் ஜூலை 7 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில்

ஆகக் கூடிய 195 ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் பிரதான அரசியல் சக்தியாக முன்வந்த இடதுசாரி மக்கள் முன்னணி (Nouveau Front populaire) இன்னமும் அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. பிரதமர் தெரிவில் அந்தக் கூட்டணிக் கட்சிகளிடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.


பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரியாகிய ஜோன் லூக் மெலன்சோன் அவர்களது கட்சி ஆகியனவற்றை உள்ளடக்கிய பரந்து பட்ட அரசியல் கூட்டணி புதிய மக்கள் முன்னணி (Nouveau Front populaire) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு அதிக ஆசனங்களை வென்றமை வாசகர்கள் அறிந்ததே.


577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தக்க வைப்பதற்கு 289 ஆசனங்களாவது அவசியம். தேர்தலில் போட்டியிட்ட முக்கிய மூன்று தரப்புகளில் எதனாலும் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை. இடது சாரிகளது மக்கள் முன்னணி 195 ஆசனங்களுடன் முதலிடத்திலும் -


அதிபர் மக்ரோனின் ஆளுங்கட்சி அணி

164 ஆசனங்களுடன் இரண்டாம் இடத்திலும் -


மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிகள் 143 ஆசனங்களுடன் மூன்றாவது ஸ்தானத்திலும் இருப்பது தெரிந்ததே.


எனினும் ஆகக் கூடிய ஆசனங்களை வென்ற கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு. அதற்காகப் பிரதமர் ஒருவரை அறிவித்து சபையில் ஆதரவைத் திரட்டி அரசமைக்க வேண்டும். இடது சாரி மக்கள் முன்னணிக்குள் பிரதமர் யார் என்ற இழுபறி நீடிப்பதால் அரசியலுக்கு வெளியே சிவில் சமூகத்தில் இருந்து ஒருவரை அப்பதவியில் நிறுத்துவது என்று சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகிய மூன்றும் இணக்கம் கண்டுள்ளன. ஆனால் தீவிர இடதுசாரிக் கட்சி அதை எதிர்க்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

17-07-2024






0 comments

Comments


You can support my work

bottom of page